பக்கம் எண் :

சீறாப்புராணம்

482


முதற்பாகம்
 

பார்த்த சொப்பனங்க ளெல்லாம் பார்த்தது பார்ததாகவே வாய்க்கும்.

 

1251. துய்யவ னருளா லாதமா மனுவாய்த்

         தோன்றிய வவனியின் வருட

     மையமி லாறா யிரத்தினி லொருநூற்

          றிருபத்து மூன்றினி லழகா

     வையக மதிக்கு முகம்மதின் வயது

          நாற்பதில் றபீவுலவ் வலினி

     லெய்திய வெட்டாந் தேதியிற் சனியி

          னிரவினிற் கிறாமலை யிடத்தில்.

11

      (இ-ள்) பரிசுத்தத்தை யுடையவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் திருவருளினால் மூலபிதாவாகிய நபி ஆதமலைகிஸ்ஸலா மவர்கள் இப்பூலோகத்தின்கண் பெருமை தங்கிய மானிட வடிவமாய் உதயமான சந்தேகமற்ற வருடமானது ஆறாயிரத்தி யொருநூற்றி யிருபத்துமூன்றில் இப்பூமி முழுவதும் அழகாக மதியாநிற்கும் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வயதானது நாற்பதில் றபீயுல் அவ்வல் மாதத்திற் பொருந்திய தேதி எட்டில் சனிக்கிழமை இராவில் ஹிறாமலையி னிடத்தில்.

 

1252. நித்தில நிரைத்த விருசிறை யொழுங்கு

         நீணிலாக் கதிர்கள்விட் டொழுக

     வித்துரு மத்தாள் சிறந்தணி திகழ

          வில்லுமிழ் கரங்கிடந் திலங்கப்

     பத்திவிட் டெறிக்குஞ் செம்மணி யிருகட்

          பார்வையிற் கருணைவீற் றிருக்கச்

     சித்திர வடிவைச் சுருக்கிமா னிடர்போற்

           செபுறயீ லவ்விடத் தடைந்தார்.

12

      (இ-ள்) முத்துக்களை நிரைக்கப் பெற்ற இரு சிறகுகளின் ஒழுங்குகளும் நீண்ட பிரகாசத்தினது கிரணங்களை விட்டு ஒழுகவும், பவளம் போன்ற இருபாதங்களும் சிறப்புற்று அழகு பிரகாசிக்கவும், ஒளியை யுமிழ்கின்ற இருகைகளும் கிடந்து ஒளிரவும், வரிசை விட்டுப் பிரபையை வீசாநிற்கும் சிவந்த இரத்தினம் போன்ற இரண்டு கண்களினது பார்வைகளிலும் கிருபையானது வீறுடனிருக்கவும், தங்களின் அழகிய சொரூபத்தைச் சுருங்கச் செய்து மனுஷியர்களைப் போல அமராதிபரான ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்கள் அவ்விடத்தின்கண் வந்து சேர்ந்தார்கள்.