பக்கம் எண் :

சீறாப்புராணம்

486


முதற்பாகம்
 

1261. மண்டலம் புரக்குஞ் செங்கோன் முகம்மதின் வதன நோக்கி

     விண்டலம் பரவும் வேத நபியெனும் பட்ட நும்பாற்

     கொண்டலே குதாவின் றீந்தா னெனுமொழி கூறிப் பின்னு

     மண்டர்வாழ்த் தெடுப்பச் செவ்வி யாரணம் புகறி யென்றார்.

21

      (இ-ள்) அப்போது இந்தப் பூலோக மனைத்தையும் காக்கா நிற்கும் செங்கோலை யுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முகத்தை ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்கள் பார்த்து மேகமானவர்களே! ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவானவன் இன்றையதினம் ஆகாயலோகமும் புகழா நின்ற வேத நபியென்று சொல்லும் ஓர் பட்டத்தை உங்களிடத்தில் தந்தானென்னும் வார்த்தையைச் சொல்லி மறுத்தும் தேவர்களான மலாயிக்கத்துமார்கள் வாழ்த்தும் வண்ணம் அழகிய வேதத்தை யோதுங்க ளென்று சொன்னார்கள்.

 

1262. செப்பிய வசனங் கேட்டுச் செபுறயீல் முகத்தை நோக்கி

     முப்படி விளங்கும் வண்ண முழுமணிக் குரிசி லேயா

     னிப்பெரும் புவியிற் றீட்டு மெழுத்திலொன் றறியே னாதி

     யொப்பரும் வேத மென்ப தோதினே னல்ல னென்றார்.

22

      (இ-ள்) நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளைத் தங்களின் இரு காதுகளினாலும் கேள்வியுற்று ஜிபுரீல் அலைகிஸ்ஸலா மவர்களின் முகத்தைப் பார்த்து வானம், பூமி, பாதாளமென்னும் மூன்று லோகங்களும் பிரகாசியா நிற்கும் அழகிய பூரணரத்தினம் போன்ற குரிசிலானவர்களே! யான் இந்தப் பெரிந பூமியின்கண் எழுதும் எழுத்தில் ஒன்றேனும் அறிய மாட்டேன். அன்றியும், ஒப்புதற்கரிய வேதமென்று சொல்லுவதையும் ஓதினவ னல்லேனென்று சொன்னார்கள்.

 

1263. சிறைநிறஞ் சுருக்கித் தோன்றுஞ் செபுறயீல் முதலோன் கூறு

     முறைவழி முகம்ம தன்பான் முன்னிருந் திருகை யார

     விறுகுறத் தழுவிப் பின்ன ரியம்புமென் றியம்பத் தோன்றன்

     மறைமுதல் வசன நாவின் வழக்கின னல்ல னென்றார்.

23

      (இ-ள்) அதைக் கேட்ட சிறகுகளினது பிரகாசத்தைச் சுருங்கச் செய்து மானிட வடிவமாய்த் தோன்றா நிற்கும் ஜிபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் யாவற்றிற்கும் ஆதியான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் சொல்லும் முறைமயினொழுங்காய் அன்போடும் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னர் இருந்து தங்களின் இரண்டு கைகளினாலும் பொருந்தும்படி நெருங்கும் வண்ணம்