பக்கம் எண் :

சீறாப்புராணம்

487


முதற்பாகம்
 

கட்டியணைத்துப் பிற்பாடு ஓதுங்களென்று சொல்லத், தோன்றலாகிய அந்நபிகள் பெருமானவர்கள் வேதத்தினது ஆதிவார்த்தையாவது யான் எனது நாவில் வழக்கமாக்கினவனல்லேனென்று சொன்னார்கள்.

 

1264. எதிரிருந் தரசர் பின்னு மிடருறத் தழுவி நோக்கி

     மதியினு மிலங்குஞ் சோதி முகம்மதே யோது மென்னப்

     புதுமையி னரிய பேறே புவியிடத் தரிய வேதங்

     கதிபெறக் கண்டுங் கேட்டுங் கற்றறிந் திலனியா னென்றார்.

24

      (இ-ள்) அவ்வாறு சொல்லவே அமராதிபரான ஜிபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்கள் மறுத்தும் நாயகம் றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னராக இருந்து அவர்களைத் துன்பமுறும் வண்ணம் கட்டியணைத்துப் பார்த்துச் சந்திரனைப் பார்க்கிலும் அதிகமாய்ப் பிரகாசியா நிற்கும் பிரபையையுடைய முகம்மதென்பவர்களே! ஓதுங்களென்று சொல்ல, ஆச்சரியத்தையுடைய அரிய பேறானவர்களே! யான் கதிபெறும்படி இப்பூலோகத்தின்கண் அருமையான வேதத்தைக் கண்களினாற் கண்டாயினும் அல்லாது காதுகளினாற் கேள்வியுற்றாயினும் கற்றுணர்ந்தவ னல்லேனென்று சொன்னார்கள்.

 

1265. கேட்டுவா னவர்கோ மானுங் கிளரொளி வனப்பு வாய்ந்த

     தோட்டுணை நெருங்க வுள்ளந் துனிவர வுடலஞ் சோரப்

     பூட்டிய கரங்கள் சேப்பப் புல்லிநந் நபியை நோக்கி

     மீட்டுமெய்ம் மறைநூன் மாற்றம் விரித்தெடுத் தியம்பு மென்றார்.

25

      (இ-ள்) நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு சொல்லியதை அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலாமவர்களும் தங்களின் இரு காதுகளினாலும் கேள்வியுற்று ஓங்கா நிற்கும் பிரகாசத்தினது அழகானது சிறக்கப் பெற்ற அவர்களின் இரு தோள்களும் நெருங்கவும், மனதில் துன்பமுண்டாகவும், சரீரமானது தளரவும், பூட்டிய இரண்டு கைகளும் சிவக்கவும், கட்டியணைத்து அந்நபியவர்களைப் பார்த்து மறுத்தும் உண்மையான வேத நூலின் வாசகத்தை விரித்து எடுத்து ஓதுங்களென்று சொன்னார்கள்.

 

1266. நெருக்கிவிட் டதற்பின் வேத நெறிநபி யுள்ளத் துள்ளே

     திருக்கிளர் புவியில் விண்ணோர் தெளிதரு மறிவு முன்னூ

     லிருக்கினி லறிவுந் தோன்றி யிடனறப் பெருகி நல்லோ

     ருருக்கொளு மரசை நோக்கி யோதவேண் டுவதே தென்றார்.

26