பக்கம் எண் :

சீறாப்புராணம்

488


முதற்பாகம்
 

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு நெருக்கிவிட்டதின் பிற்பாடு வேதத்தினது சன்மார்க்கத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் மனதினகம் செல்வமானது ஓங்குகின்ற பூமியின்கண் தேவர்களான மலாயிக்கத்துமார்கள் தேரா நிற்குமுணர்வும் முந்நூலாகிய வேதத்தினது உணர்வும் உதயமாகி இடமில்லாது அதிகரித்து நன்மைபொருந்திய ஒப்பற்ற மானிட வடிவங் கொண்டிருக்கும் அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்களைப் பார்த்து யான் ஓதவேண்டியது யாது? அதைச் சொல்லுங்களென்று கேட்டார்கள்.

 

1267. மிக்குயர் மறையின் வள்ளல் விளம்பவிண் ணவர்கள் கோமா

     னிக்றவு வெனும்சூ றத்தி லிருந்துநா லாயத் தின்ப

     மெய்க்குற மாலம் யகுல மெனுமட்டும் விளம்பு வீரென்

     றொக்கலி லுயிரின் மிக்கா யுறுநபிக் குணர்த்தி னாரால்.

27

      (இ-ள்) மிகுந்த மேன்மையை யுடைய வள்ளலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கேட்க, அமரேசுவரரான ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் இக்றவு என்று சொல்லும் சூறத்திலிருந்து நான்காயத்து மாலம் யகுலம் என்று சொல்லும் வரையும் ஓதுங்களென்று இனிமையானது சரீரத்தின்கண் பொருந்தும் வண்ணம் சொல்லிக்காட்டி உறவினரைப் பார்க்கிலும் உயிரைப் பார்க்கிலும் அதிகமாய்ப் பொருந்தா நிற்கும் அந்நபிகள் பெருமானவர்களுக்கு அறிவித்தார்கள்.

 

1268. எழுத்தினிற் றவறாச் சொல்லி னியன்முறை சிதகா வின்பம்

     பழுத்தபண் ணொலியாத் தீய்ந்த பயிருயிர் பெறுவ தாகச்

     செழித்தமெய் சபுற யீல்தஞ் செவியகங் குளிரக் கல்வி

     யழுத்திய பொருளுட் டோன்ற வகுமது மோதி னாரால்.

28

      (இ-ள்) அஹ்மதென்னும் திருநாமத்தை யுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அட்சரத்தில் தப்பாத வார்த்தைகளின் இயலினது ஒழுங்கு சிதகாது இனிமை முற்றிய இராகத்தினது ஓசையினால் கரிந்த பயிர்கள் ஜீவனையடைவதாகவும், சத்தியமானது செழிக்கப் பெற்ற ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் தங்களின் செவிகளும் மனமும் குளிர்ச்சியுறவும், அறிவானது பதியப்பட்ட பொருளானது மனசின்கண் தெரியவும் தங்களின் திருவாய் மலர்ந்து ஓதினார்கள்.