முதற்பாகம்
1269.
உறைந்தமெய்ம்
மறையின் றீஞ்சொன் முகம்மதாண் டுரைப்பச் செவ்வி
யறந்தழைத் தனநன்
மார்க்கத் தரும்புவி தழைத்த வெற்றித்
திறந்தழைத் தனவிண்
ணோர்கள் செயறழைத் தனதி காந்தப்
புறந்தழைத் தனநந்
தீனின் புகழ்தழைத் தோங்க வன்றே.
29
(இ-ள்) நாயகம்
நபிமுகம்மது சல்லால்லாகு அலைகிவசல்ல மவர்கள் சத்தியமே யுறையப் பெற்ற புறுக்கானுல் அலீமென்னும்
வேதத்தினது இனிய வசனத்தை அவ்வாறு அந்த ஹிறாமலையின் கண் வைத்து ஓதவே, நமது தீனுல் இஸ்லாமென்னும்
மார்க்கத்தினது கீர்த்தியானது வளர்வுற்று ஓங்கும் வண்ணம் அழகிய தருமங்களியாவும் வளர்வுற்றன.
ரூல்ல சன்மார்க்கத்தையுடைய அரிய இந்தப் பூலோகம் வளர்வுற்றது. வெற்றியையுடைய காரணங்கள்
வளர்வுற்றன. வானவர்களான மலாயிக்கத்துமார்களின் செயல்கள் வளர்வுற்றன. திசைகளினது முடிவின்
பக்கங்கள் வளர்வுற்றன.
1270.
பறவைக ளினங்கள்
போற்ற விலங்கினம் பலவும் போற்ற
வுறைதருந்
தருக்கள் போற்ற வூர்வன வெவையும் போற்ற
நிறைதரு மலகை
போற்ற நிரைநிரைப் பரவை போற்ற
மறைவிலா தமரர்
போற்ற முகம்மது மோதி னாரால்.
30
(இ-ள்) அன்றியும்,
பட்சிசாதிகளின் கூட்டங்களியாவும் மிருகக் கூட்டங்களியாவும் புகழவும், பூமியின்கண் தங்கா நிற்கும்
விருட்சங்களியாவும் புகழவும், ஊர்வனங்களியாவும் புகழவும், நிறைவுற்ற பைசாசங்கள் புகழவும், வரிசையுடைய
அலைகளையுடைய சமுத்திரங்கள் புகழவும், மறைவில்லாது தேவர்களான மலாயிக்கத்துமார்கள் புகழவும்,
நபிகள் பெருமான் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் திருவாய்
மலர்ந்து ஓதினார்கள்.
1271.
உயிரினுக்
குயிராய் வந்த முகம்மது முரைப்பக் கேட்டுச்
செயிரறு சபுற யீல்தம்
மெய்மயிர் சிலிர்ப்ப வோங்கி
முயலகன் மதியம்
போன்ற முகம்மதைப் போற்றி வேக
வெயிலவன் கதிரிற்
றூண்டி மேலுல கிடத்திற் புக்கார்.
31
(இ-ள்) அப்போது
குற்றமற்ற ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் தங்களின் ஜீவனுக்கு ஜீவனாய் வரப் பெற்ற நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் தங்களின் திருவாயால் ஓதும் வண்ணம் இரு காதுகளினாலும்
கேள்வியுற்றுத் தங்களின் சரீரத்தின் கண்ணுள்ள உரோமங்கள் சிலிர்க்கும்படி வளர்ந்து களங்கமற்ற
சந்திரனைப் போன்ற நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் புகழ்ந்து வேகத்தையுடைய
சூரியனது கிரணங்களைப் போலத் தூண்டி ஆகாயலோகத்தின்கண் போய்ப் புகுந்தார்கள்.
|