பக்கம் எண் :

சீறாப்புராணம்

490


முதற்பாகம்
 

1272. அரியவன் றூத ரான அகுமது கலக்க முற்று

     மருமலர்ச் சோலை சூழ்ந்த மால்வரை யிடத்தை நீங்கி

     யெரிபகற் கதிர்க்கா றோன்றா விரவினிற் றனித்து வல்லே

     விரிகதி ருமிழும் பைம்பூண் மின்னகத் திடத்திற் சார்ந்தார்.

32

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் போகவே அரியவனாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலான அஹ்மதென்னும் திருநாமத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனசின்கண் அச்சமுற்று வாசனை கொண்ட புஷ்பங்களையுடைய காவுகள் வளைந்த பெரிய அந்த ஹிறாமலையினது இடத்தை விட்டும் நீங்கிப் பிரகாசத்தையுடைய சூரியனது கிரணங்கள் தோற்றப் பெறாத இராக்காலத்தில் ஏகமாக விரைவாய் விரிந்த பிரபையை யுமிழா நிற்கும் பசிய ஆபரணங்களையுடைய மின்னாகிய கதீஜாநாயகி அவர்களின் வீட்டின்கண் வந்தார்கள்.

 

கலிநிலைத்துறை

 

1273. நடுக்க முற்றுமெய்ச் சுரத்தொடுங் குளிர்தர நலிந்து

     மிடுக்க கன்றிடப் பயத்தொடு மரிவையை விளித்துத்

     திடுக்க முற்றது துகில்கொடு பொதிமனந் தெளியா

     திடுக்க ணியாதென வறிகில னென்றன ரிறசூல்.

33

      (இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்து றசூலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் சரீரம் நடுக்கமுற்றுச் சுரத்தோடும் குளிரும் வண்ணம் மெலிந்து மனப்பயங்கரத்துடன் தங்களின் துன்பமானது நீங்கும்படி மனைவியாகிய கதீஜாநாயகி யவர்களைக் கூப்பிட்டு எனது இருதயம் தேர்ச்சியடையாது தேகம் திடுக்கமுற்றது. அத்துன்பமானது யாதென்று யானறிகிலன். ஆதலால் ஒரு வஸ்திரத்தைக் கொண்டு எனது சரீரத்தைப் பொதியுங்களென்று சொன்னார்கள்.

 

1274. தலைவர் கூறிய மொழிசெவி புகவுட றயங்கி

     நிலைகு லைந்தெழுந் தயர்வொடு நெட்டுயிர்ப் பெறிந்து

     பலம லர்த்தொடை செறிந்தபஞ் சணைமிசைப் படுத்திச்

     சலவை கொண்டுறப் போர்த்தரு கிருந்தனர் தையல்.

34

      (இ-ள்) அப்போது தையலாகிய கதீஜா நாயகியவர்கள் தங்களின் நாயகரான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு சொல்லிய வார்த்தைகள் தங்களின் காதுகளில் நுழையவே, சரீரமானது தயக்கமுற்று தங்களின் நிலைமை குலையப் பெற்று எழும்பிச் சோர்வுடன் பெருமூச்சுவிட்டுப் பல புஷ்பங்களினாலான மாலைகள் நெருங்கிய பஞ்சணையின்மீது