முதற்பாகம்
(இ-ள்) இந்த
அர்த்தத்தினால் மூடப்பட்டதாகிய ஒப்பற்ற தெய்வத்தன்மையைத் தாங்கிய மேகக்குடையையுடைய
வள்ளலான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களிடத்தில் ஒப்பாக நடக்கும்
ஜனங்களுக்கும் சொந்தமானவர்களுக்கும் வெளியாகாத சிறப்பாய்ச் சொன்னார்கள்.
1299.
ஒருவனே நாயன்மற்
றொழிந்த தேவத
மிருமையும் பேறிலா
திழிவு கொண்டதென்
றருமொழி விளக்கலா
லாய்ந்து நன்னபி
திருமொழி யுண்மையிற்
சிந்தை செய்குற்றார்.
4
(இ-ள்) அல்லாகு
சுபுகானகுவத்த ஆலாவான நாயகன் ஒருவனே. அவனொழிந்த மற்ற தேவதம் இம்மை மறுமையாகிய இருமையிலும்
பேறற்றது. அன்றியும், குற்றத்தைக் கொண்டது என்று அருமையான வார்த்தைகளை விளக்கிச்
சொல்லுவதினால் யாவர்களும் அவைகளை மனத்தின்கண் ஆராய்ந்து நமது நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்களினது தெய்வீகத்துவம் பொருந்திய வார்த்தைகளின் சத்தியத்தில் சிந்தை செய்தார்கள்.
1300.
வல்லிய மெனுமுகம்
மதுதம் மாமணம்
புல்லிய புயவரைப்
படர்ந்த பொற்கொடி
முல்லையுங் குழற்கதீ
சாமின் னேமுத
லில்லறத தொடுமிசு
லாமி லாயினார்.
5
(இ-ள்) அப்போது
வேங்கையென்று சொல்லா நிற்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பெருமை
பொருந்திய பரிமளமமைந்த தோள்களாகிய மலைகளில் படரப் பெற்ற பொற்கொடியான அழகிய முல்லைமலர்கள்
தாங்கிய கூந்தலையுடைய கதீஜாநாயகியவர்கள் ஆதியில் இல்லறத்தோடும் தீனுல் இஸ்லாமென்னும்
மார்க்கத்திலானார்கள்.
1301.
மனுமுறை நெறிவழு
வாஅ பூபக்க
ரெனுமுகில் கண்டுயில்
காலை யின்புறத்
தினகரன் மதிமடி
யிருப்பச் செவ்விய
கனவுகண் டெழுந்தகங்
களிப்புற் றாரரோ.
6
(இ-ள்) அன்றியும்,
புண்ணிய நூலினொழுங்குகளில் வழுவாத அபூபக்கரென்று சொல்லும் மேகமானவர்கள் நித்திரை செய்கின்ற
சமயத்தில் இனிமை பொருந்தும் வண்ணம் சூரியனும் சந்திரனும் தங்களின் மடியிலிருக்கும்படி அழகிய
ஓர் சொப்பனத்தைப் பார்த்துப் படுக்கையை விட்டு மெழும்பிச் சந்தோஷமடைந்தார்கள்.
|