பக்கம் எண் :

சீறாப்புராணம்

502


முதற்பாகம்
 

1309. எனவுரைத் தவர்மனங் களிப்புற் றின்புறப்

     புனைமலர்ப் பஞ்சணை பொருந்துங் காலையிற்

     கனவுகண் டினிரது புதுமை காணென

     வனமலர்த் தொடைப்புய முகம்ம தோதினார்.

14

      (இ-ள்) என்று சொல்லிய அவ்வபூபக்க ரவர்களின் மனமானது சந்தோஷமுற்று இனிமை பொருந்த நாயகம் நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நீவிர் புஷ்பங்களினால் அலங்காரஞ் செய்யப்பட்ட பஞ்சணையின்மீது பொருந்திய சமயத்தில் ஒரு சொப்பனத்தைப் பார்த்தீர். அது ஆச்சரியமென்று சொன்னார்கள்.

 

1310. சொல்லிய நன்மொழி கேட்டுத் துன்புறு

     மல்லலும் போக்கறுத் தடலபூ பக்கர்

     செல்லுறழ் நபிதிரு நாமஞ் சீர்பெற

     நல்லிய லொடுமிசு லாமி னண்ணினார்.

15

      (இ-ள்) வலிமையையுடைய அபூபக்கரவர்கள் அவ்வாறு நாயகம் நபிமுகம்மது முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் சொல்லிய நன்மை பொருந்திய வார்த்தைகளைத் தங்களின் இருகாதுகளினாலுங் கேள்வியுற்று வருத்தமிகுத்த மனத்தின் கண்ணுள்ள அல்லலையும் இல்லாமற் செய்து மேகத்துக் கொப்பாகிய அந்நபிகள் பெருமானவர்களின் கீர்த்தியானது சிறப்படையும் வண்ணம் நல்ல குணத்தோடும் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தில் பொருந்தினார்கள்.

 

1311. அந்தமி னாயகன் றூதர்க் கன்புறுஞ்

     சிந்தையர் புகழபுத் தாலிபு சேய்களிற்

     சுந்தரப் புலியலி யென்னுந் தோன்றலும்

     வந்தனை செய்துதீன் வழியி லாயினார்.

16

      (இ-ள்) அன்றியும், முடிவற்ற நாயகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூல் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அன்பு மிகுத்த மனத்தைக் கொண்டவர்களான கீர்த்தியையுடைய அபீத்தாலிபவர்களின் புதல்வர்களில் அழகிய புலியாகிய அலியென்று சொல்லும் திருநாமத்தையுடைய அரசரானவர்களும் வணக்கஞ் செய்து தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திலாயினார்கள்.

 

1312. அடிமையி லோங்கிய வறிவின் மிக்கவர்

     வடிவுறும் ஆரிதா மதலை யாகிய

     மிடலவர் சைதெனும் வீர கேசரி

     யிடரறுங் கதியிசு லாமி லாயினார்.

17