முதற்பாகம்
(இ-ள்)
அன்றியும், அடிமைகளில் உயர்ச்சி பெற்ற அறிவினால் மிகுந்தவரான அழகு பொருந்திய
ஆரிதென்பவரின் புதல்வராகிய வலிமையையுடையவரான வீரத்தைக் கொண்ட சிங்கமானவர்களும்
துன்பமற்ற மோட்சத்தையுடைய தீனுல் இஸ்லாத்தில் ஆயினார்கள்.
1313.
இயன்மறை முறையொடு மிவர்க ளிங்ஙன
மயலவ ரறிவுறா
தடங்கி நன்னெறிச்
செயலென
நாட்குநாட் டேர்ந்து தம்மன
மயலறத் தீனெனும்
வழியிற் றேறினார்.
18
(இ-ள்)
இத்தன்மையாக இஸ்லாமாகிய இவர்கள் ஒழுங்கையுடைய வேதமுறையுடன் அன்னிய ஜனங்கள் அறியாது
அடக்கமுற்று நல்ல சன்மார்க்கத்தினது செயலென்று தங்களினது மனசின்கண் நாட்குநாள் தெளிந்து
மயக்கமறும்படி தீனென்று சொல்லும் மார்க்கத்தில் தேற்றமடைந்தார்கள்.
1314.
அறிவினிற் றெளிந்தபூ பக்க ரன்பெனு
முறவினிற்
கிளைகளி லுற்ற பேர்களுக்
கிறையவ னபியிவ
ரென்ன வேதநூற்
றுறையொடும்
ரகசியச் சொல்லிற் சொல்லினார்.
19
(இ-ள்)
அன்றியும், அறிவுகளில் தேர்ந்த அபூபக்கர் சித்தீகுறலியல்லாகு அன்கு அவர்கள் அன்பென்று
சொல்லும் சினேகத்திலுற்ற பேர்களுக்கும் தங்களின் குடும்பத்திலுற்ற பேர்களுக்கும் இந்த
முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் யாவற்றிற்கும் இறைவனான ஜல்லஜலாலகுவத்த ஆலாவின்
நபியென்று வேதநூற்களின் றுறையோடும் இரகசியமான வார்த்தைகளினாற் சொன்னார்கள்.
1315.
செவ்விய
ரிவர்மொழி சிதைவி லாதென
வவ்வவர்
கருத்தினு ளாய்ந்தவ் வாற்றிடைக்
கவ்வையங் கடனதி
கடப்ப வன்றொரு
நவ்விபி னெழுநபி
பதத்தை நண்ணினார்.
20
(இ-ள்)
அதைக் கேட்ட ஒவ்வொருவர்களும் அழகையுடையவர்களான இந்த அபூபக்கரவர்களின் வார்த்தை
சிதைவற்றதென்று தங்களின் கருத்தினகம் ஆராய்ந்து அந்த ஷாம்தேசத்திற்குப் போகின்ற
வழியின்கண் ஒலியையுடைய அழகிய சமுத்திரத்தைப் போன்ற ஆற்றைத் தாண்டும்வண்ணம் அன்றைய
தினம் ஒரு மானின் பின்னால் எழுந்தருளிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களின் பாதத்தில் வந்து நெருங்கினார்கள்.
|