முதற்பாகம்
1484.
மற்றுமத்
தரையிடைக் கிடத்தி மார்பக
மிற்றிடப்
பெருஞ்சிலை யுரத்தி லேற்றுவன்
சற்றொரு
நொடிவரை தவிர்ந்தி ரான்மனப்
பற்றறு மிரக்கமி
லாத பாவியான்.
145
(இ-ள்)
அன்பற்ற இரக்க மில்லாத மனத்தை யுடைய பாவியான அந்த இபுனு கலபென்பவன் பிலாலென்பவரை
மறுத்தும் அப்பூமியின்கண் கிடக்கும்படி செய்து மார்பினிடமானது இற்றிடும் வண்ணம் பெரிய கல்லை
வலிமையோடும் ஏற்றுவான். அன்றியும் ஒரு சிறிய நொடிப் பொழுதாவது அவ்விதம் செய்யும் கொடிய
தொழிலை விட்டும் நீங்கியிரான்.
1485.
நெஞ்சினிற்
பெருஞ்சிலை சுமந்து நீங்கிலா
வெஞ்சுரத்
திடைமிடை மிடைந்தும் வேதநூல்
விஞ்சையின்
முகம்மது விளக்கு முண்மையை
யஞ்சலித் தவனலா
லறிவு நீங்கிலான்.
146
(இ-ள்)
அப்போது பிலாலென்பவர் தமது மார்பில் பெரிய கல்லைத் தாங்கியும் மாறாத வெவ்விய பாலை
நிலத்தின்கண் கிடந்து மிகமிடைந்தும் வேதநூலின் கல்வியை யுடைய நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் விளக்கா நிற்கும் சத்தியத்தை அஞ்சலித்தவரே யல்லாமல்
தமது அறிவானது ஒழிந்திலர்.
1486.
இபுனுகல் பவனிட ரென்னுந் தீயினி
னவநித
மெனப்பிலால் நடுங்க விண்ணுமிவ்
வவனியும்
புகழ்நபி தோழ ராகிய
கவனவாம் பரியபூ
பக்கர் கண்டனர்.
147
(இ-ள்)
அந்நேரத்தில் ஆகாயலோகமும் இந்தப் பூலோகமும் போற்றா நிற்கும் நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சினேகிதரான விரைவாகத் தாவா நிற்கும் குதிரையையுடைய
அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் இபுனுகலபாகிய அந்தக் காபிரின் துன்பமென்று
சொல்லும் அக்கினியின்கண் வெண்ணையைப் போலப் பிலாலென்பவர் நடுங்கும் வண்ணம் தங்களின்
கண்களினாற் பார்த்தார்கள்.
1487.
பொறுக்கரும்
வேதனை பொறுத்து நிண்ணய
மறுக்கில னிவனென
மதித்துக் கூறிய
வெறுக்கைகொண்
டடிமைபி லாலை மீட்டிநம்
பெறற்கரு
முரிமையா னென்னப் பேசினார்.
148
|