முதற்பாகம்
1536.
இன்றி ருந்தெழுந் திகலட லரிமுகம் மதுவை
வென்றி கொண்டன
மிலையல திவணெறி மேவுங்
கன்றி னைக்கடிந்
தோமிலை யெனமனங் கசங்கி
நன்று நன்றுநம்
வீரமென் றகத்திடை நகுவார்.
34
(இ-ள்)
அவ்வாறு பார்த்த உமறுகத்தா பென்பவர் நாம் இன்றையதினம் அங்கிருந்து எழும்பி விரோதத்தைக்
கொண்ட வலிமையையுடைய சிங்கத்தை நிகர்த்த முகம்மதென்பவனை வெற்றி கொண்டோமில்லை. அல்லது
இந்தப் பாதையின்கண் பொருந்திய காளையாகிய மாட்டுக் குட்டியை வெட்டி னோமில்லையென்று
சொல்லி இருதயம் கசங்கப் பெற்று நமது வீரமானது நல்லது! நல்லது!! என்று மனசின்கண்
சிரித்தார்.
1537.
முனிந்து புன்னகை
கொண்டவா ளுமறைமுன் னடுத்துக்
குனிந்து பாதல
மோந்துடல் குழைத்தறத் தூங்கிக்
கனிந்த வாயசைப்
போட்டிரு காதினை யசைத்து
வனைந்த போலக
லாதுநின் றதுமழ விடையே.
35
(இ-ள்)
அவ்விதம், கோபித்துப் புன்சிரிப்புக் கொண்ட வாளாயுதத்தை யுடைய உமறுகத்தா பென்பவரை
இளம்பருவத்தையுடைய அந்தக் காளை மாடானது முன்னாக நெருங்கித் தலையைத் தாழ்த்திப் பரப்பை
யுடைய பூமியை முகந்துத் தனது சரீரத்தைக் குழையச் செய்து மிகவும் தூக்கமுற்றுக் கனியப் பெற்ற
வாயை அசைபோட்டு இரண்டு செவிகளையும் அசையும்படி செய்து வளைந்ததைப் போல நீங்காது
அவ்விடத்திலேயே நின்றது.
1538.
ஏறு முன்னணித்
திட்டதென் றெழிற்கர வாளான்
மாறி வீசினர்
முடுக்கின ரடிக்கடி வளைத்துக்
கோறல் செய்குவ
னியானெனக் குவலயங் குலுங்கச்
சீறி முன்னினு
மும்மடங் கெனும்படி திரிந்தார்.
36
(இ-ள்)
அப்போது உமறுகத்தா பென்பவர் அந்தக் காளை மாடானது தமக்கு முன்னாகச் சமீபித்ததென்று
சொல்லி அழகிய தமது கையிலிருந்த வாளினால் மாறி வீசி நெருங்கினார். அன்றியும், நான்
உன்னைக் கொல்லுவேனென்று சொல்லி இப்பூமியானது குலுங்கும் வண்ணம் சீற்றமுற்று அடிக்கடி தடுத்து,
முன்னிலும் மூன்று பங்கென்று சொல்லும் வண்ணம் நான்கெல்லைகளிலும் திரிந்தார்.
1539.
தொலைந்த
திவ்வணம் வெய்யவன் றோன்றுமுன் றொடுத்திட்
டலைந்து
லைந்திடைந் தறத்தவித் தசறுமட் டாகக்
கலைந்த தன்றியே
றகப்பட விலையெனக் கலங்கி
மலைந்தி டாமன
மறுகுற வுமறுள மலைந்தார்.
37
|