பக்கம் எண் :

சீறாப்புராணம்

585


முதற்பாகம்
 

லென்பவனும் அவனுடன் சூழ்ந்திருந்தவர்களாகிய மற்றும் காபிர்களும் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று மனமானது விஷத்தைப் போலும் கறுப்படைந்து ஒருவருக்கொருவர் தங்களின் ஒள்ளிய தோள்கள் குலுங்கும் வண்ணம் சிரித்து வலிமை பொருந்திய அவ்வுமறு கத்தாபின் அழகிய முகத்தைப் பார்த்துச் சொல்லுவார்கள்.

 

1552. ஈதொரு புதுமை யாக வெண்ணிநீ ருரைத்தீர் வேத

     மாதவன் முகம்ம தென்போன் வளர்த்தவஞ் சனைக்கு ணூறு

     பேதமொன் றதற்குக் காணா திதனைநீர் பிதற்றிப் பேச

     றீதுறு மிவைபோ லியாங்கள் கண்டதுந் தெரிக்கொ ணாதே.

50

      (இ-ள்) நீவிர் இதையொரு ஆச்சரியமாக மனசின்கண் நினைத்துச் சொல்ல வந்தீர். ஆனால் இது வேதத்தினது மகாதவத்தை யுடையவனான அந்த முகம்மதென்பவன் உண்டாக்கிய வஞ்சனைகளுக்குள் நூறு பகுப்பான ஒன்றிற்குப் பற்றாது. இவ்வாச்சரியத்தை நீவிர் பலகால் பேசுவதினால் தீதுண்டாகும். இவைபோல நாங்கள் பார்த்ததையுந் தெரிவித்துச் சொல்ல முடியாது.

 

1553. இன்னமு மிவைபோ னூறா யிரம்விதங் கண்ணுற் றாலு

     மன்னவன் விளைக்கும் வஞ்ச மதனைநீ ரமைத்தல் வேண்டும்

     பன்னுத லெவருங் கேட்பிற் பழுதுறும் பருதி வேலோய்

     முன்னுமுன் கருத்தி லுன்னும் படிமுடித் திடுமி னென்றார்.

51

      (இ-ள்) இன்னமும் சூரியனை யொத்த வேலாயுதத்தை யுடையவரே! இவை போல இலட்சம் விதம் நீவிர் பார்த்தாலும் மன்னவனான அந்த முகம்மதென்பவன் செய்யும் வஞ்சகத்தை அமைத்தல் வேண்டும். அவ்விதம் அமைக்காது வெளியிற் சொல்லுவதை யாவர்களும் கேட்பார்களே யானால் அதனால் குற்றமுண்டாகும். ஆதலால் ஆதியில் உம்முடைய கருத்தில் நினைத்த வண்ணம் செய்து முடித்திடுமென்று சொன்னார்கள்.

 

1554. பொய்யினைப் புகலேன் கண்ட புதுமையைப் புகன்றேன் றோன்று

     மெய்யினைப் பொய்யென் றோத லியாவர்க்கும் விதிய தன்றே

     யையுற லுரைக்க லாகா ததிசய மறைக்க லாகா

     வையகத் தியற்கை யீதென் றுமறிவை வழங்கிப் போனார்.

52

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் சொல்லவே உமறுகத்தா பென்பவர் நான் பொய்மையான வார்த்தைகளைச் சொல்ல மாட்டேன் கண்களினாற் கண்ட ஆச்சரியத்தைச் சொன்னேன்.