பக்கம் எண் :

சீறாப்புராணம்

588


முதற்பாகம்
 

      (இ-ள்) ஹபீபென்று சொல்லும் காரணப் பெயரையுடைய முகம்மதென்று சொல்லப்பட்டவர். சந்திரன், சூரியன், பூமி, ஆகாயம், வான முதலிய மற்ற எல்லாப் படைப்புகளும் துதியா நிற்கும் புதிய ஆலத்தையுடையவனான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் சத்தியத் தூதர். அன்றியும், நபிமார்களில் கீர்த்தியினால் மிகுந்த கீர்த்தியையுடையவர். இம்மை மறுமையென்னும் இரண்டு பதிக்கும் மேன்மையை யுடையவர். படைப்பாகவுள்ள யாவற்றிற்கும் முதன்மையானவர். மோட்சத்தைத் தரா நிற்கும் அற்புதத்தைப் பெற்றவர்.

 

1561. அன்னவர் முன்ன ரேகி யவர்நிலை கொண்ட தீனின்

     சொன்னயக் கலிமா வோதித் துணைமல ரடியைப் போற்றிப்

     பன்னுமா மறையின் றீஞ்சொற் படிவழு வாது நேர்ந்து

     பொன்னுமா மணியும் போலப் பொருந்துத லெவர்க்கும் வேண்டும்.

59

      (இ-ள்) அந்த முகம்ம தென்பவரின் முன்னர்ச் சென்று அவரின் நிலைமையைக் கொண்ட தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது சொல்லின் நயத்தை யுடைய ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாகிழு என்னும் கலிமாவைச் சொல்லி அவரின் தாமரை மலர் போன்ற இரு பாதங்களையும் துதித்துப் புகழா நிற்கும் மகத்தான வேதத்தினது இனிய வார்த்தைகளின் வண்ணம் தவறாது உடன்பட்டுப் பொன்னையும் பெருமை பொருந்திய இரத்தினத்தையும் போல இசைவது யாவர்களுக்கும் வேண்டும்.

 

1562. தேவநன் மொழியென் றென்சொற் சிந்தையிற் சிந்தித் தோர்கள்

     காவல ரெவர்க்கு மேலாய்க் காசினிக் கரச ராகிப்

     பூவலர் சுவன நாட்டைப் பொதுவறப் புரப்போ ராகி

     மேவுதீ வினைக டீர்த்து வேதநல் லறிவ ராவார்.

60

      (இ-ள்) ஆதலால் என்னுடைய வார்த்தைகளை நன்மை பொருந்திய தெய்வ வாக்கியமென்று மனசின்கண் எண்ணினவர்கள் அரசர்களியாவர்களுக்கும் மேன்மையராகி இந்தப் பூலோகத்திற்கும் இராஜராகிப் புஷ்பங்கள் மலரா நிற்கும் சோலைகளையுடைய சொர்க்கலோகத்தை ஏகமாக ஆட்சி செய்வோராகிப் பொருந்திய பாவங்களும் தீரப் பெற்று வேதத்தினது நல்ல அறிவை யுடையவர்களாவார்கள்.

 

1563. வருந்திடா தகலு நுந்த மனத்துறை வழக்கின் சொல்லைத்

     திருந்திட வுரையு நீதிச் செவ்வியன் முகம்ம தின்சொற்

     பொருந்திட நடவு மென்முன் புகல்வது புந்தி கேடென்

     றிருந்தவப் பெயருக் கெல்லா மினையன வியம்பிற் றன்றே.

61