பக்கம் எண் :

சீறாப்புராணம்

589


முதற்பாகம்
 

      (இ-ள்) ஆதலால் நீங்கள் வருத்தமுறாது அகன்று செல்லுங்கள் உங்களுடைய மனத்தின்கண் தங்கிய வழக்கினது வார்த்தைகளைத் திருந்தும்படி முகம்மதிடத்திற் சொல்லுங்கள். செவ்வையான நியாயத்தினது ஒழுங்கையுடைய அந்த முகம்மதின் வார்த்தைகளைக் கேட்டுப் பொருந்தும் வண்ணம் நடவுங்கள். எனது முன்னர் சொல்லுவது உங்களின் புத்திகேடென்று அங்கு தங்கியிருந்த அவ்வறபிக ளெல்லாவருக்கும் இப்படிப்பட்டவைகளைச் சொல்லிற்று.

 

1564. புத்துநன் குரைத்த மாற்றம் புதுமையென் றெவரும் போந்தார்

     மத்தகக் கரடக் கைமா மடுத்தெறிந் துதிரஞ் சிந்துஞ்

     சித்திர வடிவாட் செங்கை யுமறெனுஞ் செம்ம லேற்றி

     னுத்தரந் தனையு மிந்த வுறுதியு நினைத்துத் தேர்ந்தார்.

62 

      (இ-ள்) அந்த விக்கிரகமானது அவ்வாறு நன்றாகச் சொல்லிய சமாச்சாரங்களை அங்கு தங்கியிருந்த யாவர்களும் ஆச்சரியமென்று சொல்லிப் போயினார்கள். அப்போது மத்தகத்தைக் கொண்ட மதத்தையுடைய யானைகளை வெட்டி அவற்றின் இரத்தத்தை யுண்டு சிந்தா நிற்கும் அழகிய கூர்மை தங்கிய வாளாயுதத்தைப் பெற்ற சிவந்த கையையுடைய உமறென்று சொல்லும் செம்மலானவர் முன்னை நாள் சந்தித்த காளை மாட்டினது உத்தரத்தையும் இந்த நிண்ணயத்தையும் மனசின்கண் எண்ணித் தெளிவடைந்தார்.

 

1565. நென்னலேற் றுரையுந் தெய்வ நிகழ்த்திய மொழியும் பார்த்து

     முன்னுறு காட்சி யேதோ முடிவதொன் றுளதென் றெண்ணித்

     தன்னகத் திருத்திச் செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு

     மன்னுசோ தரியென் றோதும் பாத்திமா மனையிற் சென்றார்.

63

      (இ-ள்) அவ்வாறு தெளிவடைந்த உமறென்பவர் முந்தின நாளில் அந்தக் காளை மாடு பேசின வார்த்தைகளையும் தற்சமயம் தெய்வமாகிய விக்கிரகஞ் சொல்லிய வார்த்தைகளையும் பார்த்து ஆதியிற் பொருந்திய அற்புதமானது யாதோ ஒன்று முடிய வேண்டியதுண்டு மென்று நினைத்து அதைத் தமது மனசின்கண் இருக்கும்படி செய்து தாம் போகவேண்டிய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் இடத்தைவிட்டும் திரும்பிப் பொருந்திய தமது சகோதரியென்று சொல்லும் பாத்திமா அவர்களின் வீட்டிற்கு வந்தார்.

 

1566. திருமயில் பாத்திமாவுஞ் செவ்வியல் சகீதுந் தேன்சோர்

     மருமலி படலைத் திண்டோண் முகம்மதின் கலிமா வோதிக்

     குருநெறி கப்பா பென்னுங் குரிசின்முன் னிருந்து செல்வம்

     பெருகிய மறைநேர் கேட்டுப் பிரியமுற் றிருக்குங் காலை.

64