பக்கம் எண் :

சீறாப்புராணம்

591


முதற்பாகம்
 

1569. கணவனைச் சினந்தா ரென்னக் காரிகை பாத்தி மாகண்

     டிணைவிழி முத்தஞ் சிந்த வின்னுயிர்ப் பிறப்பை நோக்கி

     மணவலித் தடக்கை வேந்தே மருவலர் போலச் சீற

     லணவது நுமக்கென் றோதி யடர்த்ததை விலக்கா நின்றார்.

67

      (இ-ள்) அந்நேரத்தில் காரிகையாகிய பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்கள் தங்களின் நாயகரான ஸயீது றலியல்லாகு அன்கு அவர்களை உமறுகத்தாபென்பவர் கோபித்தாரென்று மனசின்கண் நினைத்துத் தங்களின் இரண்டு கண்களிலுமிருந்து முத்துப் போலும் கண்ணீரானது சொரியும் வண்ணம் இனிய உயிர் போன்ற சகோதரரைப் பார்த்துக் கூட்டமாகிய வல்லமையைக் கொண்ட பெருமை பொருந்திய கையையுடைய அரசரானவரே! நீவிர் சத்துராதிகளைப் போலக் கோபிப்பது உமக்குப் பொருந்தாதென்று சொல்லி அவர் நெருக்கியதை விலக்கினார்கள்.

 

1570. மடித்தவா ளெயிறு கவ்வி நின்றமன் மடந்தை தன்னை

     வெடித்திட வுறுக்கிக் கூறி விழிக்கனல் சிதறச் சீறி

     யெடுத்ததோர் கரத்திற் றண்டா லிளம்பிறை நுதற்கு மேல்பா

     லடித்தன ருதிர மாரி யாறுபட் டொழுகிற் றன்றே.

68

      (இ-ள்) அவ்வாறு விலக்கவே ஒள்ளிய பற்களினால் மடித்த அதரத்தைக் கடித்து நின்ற அரசரான உமறுகத்தா பென்பவர் மடந்தையாகிய தமது சகோதரி பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களை விரோதித்துக் கடிய ஓசையுடன் பேசி இரண்டு கண்களிலு மிருந்து அக்கினியானது சிந்தும் வண்ணம் சீற்றமுற்று ஒப்பற்ற கையின்கண் எடுத்த தண்டாயுதத்தினால் இளம் பருவத்தையுடைய சந்திரன் போன்ற நெற்றியினது மேற்பக்கத்தில் அடித்தார். அவ்வடியினால் இரத்த மழையுண்டாய் ஆறாக ஒழுகிற்று.

 

1571. சிரசுடைந் துதிரஞ் சிந்தித் தேங்கிய மயிலை நோக்கி

     விரிகதிர் மணிப்பைம் பூணார் வெகுளியுள் ளடங்க வேங்கி

     யரிவைநும் மனைக்கு ணீவி ரடிக்கடி யோதி யோதிப்

     பரவிய மாற்ற மென்னே தெளிதரப் பகர்மி னென்றார்.

69

      (இ-ள்) அவ்வாறு தலையானது தகர்ந்து இரத்தம் சொரிந்து நிறையப் பெற்ற மயிலாகிய பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களைப் பார்த்து விரிந்த கிரணங்களைக் கொண்ட வேலையையுடைய பசிய ஆபரணங்களைப் பெற்றவரான உமறுகத்தா பென்பவர் தமது கோபமானது மனசின்கண் அமையும் வண்ணம் இரக்கமுற்று அரிவை யானவரே! நீவிர் உமது வீட்டினகம் அடிக்கடிப் படித்து படித்து வணங்கிய சொல்லானது யாது? அதைத் தெளியும்படி எனக்குச் சொல்லுமென்று கேட்டார்.