பக்கம் எண் :

சீறாப்புராணம்

60


முதற்பாகம்
 

வாசனையையும் நீங்காத மலைகளும் மயங்கும் வண்ணம் விஜயமானது பிரகாசிக்கப்பட்ட தோள்களையும் பார்த்து ஒப்புச் சொல்லுதற் கரிய பெருமையிற் சிறந்தவரே! நல்ல நிலைமையைப் பெற்ற வாழ்வானவரே! எனது மகரைத் தருவீராக; பின்னர் என்னிடம் வருவீராக என்று கூறினார்கள்.

 

120. கேட்டனர் மகரென் றாதங் கிலேசமுற் றிறைபாற் கெஞ்சி

    வாட்டமில் லவனே யெந்த வகைமகர் கொடுப்ப தென்றார்

    நாட்டிய புகழ்சேர் மக்க முகம்மது நபிதம் பேரிற்

    சூட்டிய சலவாத் தீரைந் துரையென விறைவன் சொன்னான்.

22

      (இ-ள்) யாவர்க்கும் மூல பிதாவான நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்கள் பீவி ஹவ்வா அலைகிஸ்ஸலா மவர்கள் அவ்வாறு மகர் கேட்டார்களென்று அச்சமடைந்து இறைவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் சந்நிதானத்திற் கெஞ்சி யாதொரு வாட்டமுமில்லாத கடவுளே! மகரானது எந்த விதத்திற் கொடுப்பது என்று கேட்டார்கள். அதற்கு இறைவனான அவ்வாண்டவன் நிலைநிறுத்தப் பெற்ற கீர்த்தியானது பொருந்திய திருமக்கமா நகரத்தினது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் பேரில் சூட்டுகின்ற பத்துச் சலவாத்தைக் கூறுமென்று கூறினான்.

 

121. மதிக்கதிர் விலக்குஞ் சோதி முகம்மதின் சலவாத் தோத

    விதித்தன னிறையென் றாதம் விளங்கொளிச் சலவாத் தோதித்

    துதித்தனர் ஹவ்வா கேட்டுச் சோபன மகர்பொற் றேனென்

    றிதத்தித மித்து நெஞ்ச மிருங்களிப் பேறி னாரே.

23

     (இ-ள்) நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்கள் இறைவனாகிய ஜல்ல ஜலாலகு வத்த ஆலா வானவன் சந்திர கலைகளை அகற்றா நிற்கும் பிரகாசத்தைக் கொண்ட நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் சலவாத்தைக் கூற, அவ்வாறு கற்பித்தானென்று இலங்குகின்ற ஒளிவையுடைய சலவாத்தைக் கூறிப் புகழ்ந்தார்கள். அதை ஹவ்வா அலைகிஸ்ஸலா மவர்கள் காதுகளினாற் கேள்வியுற்று சோபனத்தைக் கொண்ட மகரைப் பெற்றேனென்று சொல்லி இனிமையுடன் ஒன்றுபட்டு மனத்தின்கண் பெரிய சந்தோஷமானது அதிகரிக்கப் பெற்றார்கள்.

 

122. கடிமலர்க் கொடியுஞ் செவ்விக் கற்பகத் தருவும் போலப்

    பிடிநடை மயிலும் வெற்றி பெறுந்திற லரசுங் காம

    மிடையறா தமிர்த போக மினிதுண்டு களித்துப் பொங்கி

    வடிவுறு மின்ப வெள்ள வாரிக்கு ளழுந்தி னாரே.

24