New Page 1
முதற்பாகம்
யுருகிமதி
மயங்கியெதி ருரையாம
லூமனென
வொடுங்கி வான்றோய்
பெருவரையின்
மடங்கலெதிர் வரையாடு
நிகர்வதெனப் பேதுற் றானே.
19
(இ-ள்)
சூரியனென்னும் கலிமாவினால் அந்தகாரமாகிய குபிர்மார்க்கத்தை அடர்த்து வீசா நிற்கும் ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவின் றசூலான நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களின் விளங்காநின்ற புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது வசனங்களை அவ்வுத்துபா
வென்பவன் தனது காதுகளினாற் கேள்வியுற்று அதன் பொருள்களை மனசின்கண் தெளிந்து பிரித்துப்
பார்த்து ஆச்சரியப்பட்டு உருகி அறிவானது மயங்கப் பெற்று பதில் பேசாமல் ஊமையைப் போல
ஒடுக்கங் கொண்டு ஆகாயத்தின்கண் தோய்ந்த பெரிய மலையினது சிங்கத்திற்கு முன்னர்
குறும்பாட்டை ஒப்பென்று சொல்லும் வண்ணம் புத்தியானது கலங்கப் பெற்றான்.
1657.
அலங்குளைவா லரியேறு முகம்மதுநா
விற்பிறந்த தன்றித் தீஞ்சொ
லிலங்கமர
ரிறைமொழிகேட் டிவர்க்குரைத்த
தறுதியென
விதயத் தோர்ந்து
கலங்குமனந்
தெளிந்துநபி கமலமலர்
முகநோக்கக் கண்க ணாணி
விலங்கினமொத்
தெவரோடு மொழியாது
தனியெழுந்து
விரைவிற் போனான்.
20
(இ-ள்)
அவ்வாறு கலங்கப் பெற்ற உத்துபாவென்பவன் இந்த இனிமையான வசனமானது பிரகாசியா நிற்கும்
மயிரைக் கொண்ட வாலையுடைய ஆண்சிங்கமாகிய முகம்மதென்பவரின் நாவினாலுண்டானதல்ல.
ஒளிர்கின்ற ஜிபுரீல் அலைகிஸ்ஸலாமவர்கள் இறையவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின்
வார்த்தைகளைக் கேள்வியுற்று இந்த முகம்மதுக்குச் சொன்னது முடிவென்று தனது மனசின்கண் தெளிந்து
கலக்கமடைந்த இருதயமானது தேறுதலமைந்து அந்நபிகள் பெருமான் நபிறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களின் தாமரைப் புஷ்பம் போன்ற முகத்தைப் பார்ப்பதற்குத் தனது கண்கள் வெட்கிக்கப்
பெற்று மிருகச்சாதியைப் போல ஒருவருடனும் பேசாது ஏகமாகத் துரிதமா யெழும்பித் தனது திசையை
நோக்கிச் சென்றான்.
|