பக்கம் எண் :

சீறாப்புராணம்

628


முதற்பாகம்
 

நிற்கும் விரோதியாகிய முகம்மதென்பவனின் ஆவியானது ஆகாயத்தின்கண் குடியாகப் புகுதுவதற்குத் தகுதியாக்கும் முறைமையையுடையவனான நான் எண்ணினபடி நிறைவேற்றுவேன் பாருங்களென்று சொல்லி.

 

1663. தேறாத மதியாலு முற்றாத

         வலியாலுஞ் செவ்வி யோர்க்கு

     மாறாத பெரும்பகையாய் முகம்மதென

         வுதித்தோன்றன் மாயந் தானோர்

     பேறாக நினைத்துமறு கத்தாபைப்

         போலமனம் பேது றேனியான்

     வீறாரும் வேல்வேந்தீ ரிவைசரத

         மெனமறுத்தும் விளம்பி னானே.

5

      (இ-ள்) பிரகாசமானது நிறையப் பெற்ற வேலாயுதத்தையுடைய அரசரானவர்களே! தெளியாத அறிவினாலும் முதிராத வலிமையினாலும் அழகையுடையவர்களுக் கொழியாத பெரிய விரோதமாய் முகம்மதென்று சொல்லும் வண்ணம் தோன்றினவனுடைய வஞ்சகத்தை ஓரூதியமாக எண்ணி உமறுகத்தா பென்பவரைப் போல நான் மனமானது வேற்றுமைப் படேன் இவை சத்தியமென்று மறுத்துஞ் சொன்னான்.

 

1664. மதியார்தஞ் செவிக்கியைய வாக்கினா

         லிவையுரைத்து மனத்தி னூடு

     கொதியார்வெவ் விடவரவின் வாய்த்தேரை

         யெனவறிவு குலைந்து மேனாள்

     விதியாதென் றறியாத கொடும்பாவி

         யவைநீங்கி விண்ணி னூடும்

     பதியாகப் படுத்தகொடி மணிமாட

         மனைபுகுந்தான் பண்பி லானே.

6

      (இ-ள்) இனி வரா நிற்கும் தினத்தில் தனது விதியானது இன்னதென்றறியாத கொடிய பாவியான குணமற்ற அந்த அபூஜகிலென்பவன் உண்மையைக் கருதாதவர்களாகிய அந்தக் காபிர்களின் காதுகளுக்குப் பொருந்தும் வண்ணம் தனது வாக்கினால் இந்த வார்த்தைகளைக் கூறி மனசின்கண் கொதித்தலைக் கொண்ட வெவ்விய விஷத்தையுடைய சர்ப்பத்தினது வாயிலகப்பட்டத் தேரையைப் போலப் புத்தியானது குலையப் பெற்று அந்தச் சபையை விட்டும் அகன்று ஆகாயத்தின் கண்ணும் பதிவாகச் செறிக்கப்பெற்ற கொடிகளமைந்த அழகிய மேன்மாடத்தையுடைய தனது வீட்டின்கண் போய் நுழைந்தான்.