பக்கம் எண் :

சீறாப்புராணம்

631


முதற்பாகம்
 

வலிமையைத் தரித்த கூட்டமாகிய நமது பந்துக்களோடும் அந்த முகம்மதென்பவனை மாளும் வண்ணம் செய்குவோமே யானால் நம்மவர்களுக்குத் தருமமானது தரா நிற்கும் மோட்சத்துடன் கீர்த்தியுமுண்டாகும்.

 

1670. இந்த வல்வினை தவிர்த்திடற் கெனதுளம் பொருந்தச்

    சிந்தி டாதுறு மொழிபல ருளத்தினுந் தேர்ந்து

    மந்தி ரத்தொடு வழுவறு முறைவழங் கிடுமென்

    றந்த மன்னவர் தமக்குரைத் தபூசகல் கேட்டான்.

12

      (இ-ள்) ஆதலால் எனது மனமானது இசையும் வண்ணம் இந்த வலிய வினையைத் தவிர்ப்பதற்குக் கெடாது பொருந்தா நிற்கும் வார்த்தைகளை நீங்கள் உங்கள் பலபேர்களின் மனசின் கண்ணும் தெளிந்து ஆலோசனையுடன் குற்றமற்ற வார்த்தைகளாய்ச் சொல்லுங்களென்று அங்கு கூடியிருந்த அரசர்களான அந்தக் காபிர்களுக்கு அபூஜகி லென்பவன் சொல்லி வினாவினான்.

 

1671. மாறு கொண்டகு மதுநடத் திடும்வர லாற்றை

     வேறு கொண்டபூ சகல்விளம் பியமொழி யனைத்துங்

     கூறு கொண்டவர் சிந்தையிற் பலபல குறித்து

     வீறு கொண்டொரு மொழிப்பட வெதிர்விளம் புவரால்.

13

      (இ-ள்) அஹ்மதென்னும் திருநாமத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்தக் காபிர்களின் செய்கைகளுக்கு மாறுகொண்டு நடத்தா நிற்கும் ஒழுங்குகளை வேற்றுமையாகக் கொண்டு அபூஜகிலென்பவன் அவ்வாறு வினவிய வார்த்தைகளெல்லாவற்றையும் அந்தக் காபிர்கள் வகையாய் உட்கொண்டு வேகமடைந்து மனசின்கண் பற்பல ஆலோசனைகளைக் குறித்து ஒரு வார்த்தைப்பட அவன் வினாவுக்கு பதில் சொல்லுவார்கள்.

 

1672. உரைத்த வாசக நன்குன துறுமொழிக் கெதிராத்

     திருத்தி வேறுரை பகரவல் லவரெவர் திறலோய்

     விரித்து மேலுரை பகரவு நமர்குலம் விளங்கப்

     பொருத்த வுநினை யலதுவே றிலைச்செழும் புவிக்கே.

14

      (இ-ள்) வலிமையையுடைய அபூஜகிலே! நீ கூறிய வார்த்தையானது நல்ல வார்த்தை. பொருந்திய உனது வார்த்தைகளுக் கெதிராகத் திருத்தி வேறு வார்த்தைகள் சொல்ல வல்லமையுடையவர்கள் யாவர்? ஒருவருமில்லர். மேலும் செழிய இந்தப் பூலோகத்தின்கண் மேலான வார்த்தைகளை விரிவாய்ச் சொல்லவும் நம்மவர்களின் குலமானது பிரகாசிக்கும் வண்ணம் பொருத்தவும் உன்னையல்லாமல் வேறே யொருவருமில்லர்.