பக்கம் எண் :

சீறாப்புராணம்

635


முதற்பாகம்
 

1683. எழுது கின்றன னென்றது மவனிருந் ததுவும்

     பழுதி லாதிற்றை முகுர்த்தமு நிமித்தமும் பார்க்கின்

     முழுதும் வெற்றியே யலதிட ரிலையென முதலோர்

     தொழுது புத்தினைப் புகழ்ந்துவக் கணைதொகுத்துத் துரைப்பார்.

25

      (இ-ள்) அப்போது அரசர்களான அபூஜகில் முதலிய யாவர்களும் களங்கமில்லாது அவன் கடிதத்தை எழுதுகிறேனென்று சொன்னதையும் அவன் இருந்ததையும் இன்றைய தினத்தினது சுபவேளையையும் நிமித்தத்தையும் ஆலோசித்துப் பார்த்தால் நமக்கு முழுவதும் ஜெயமேயல்லாமல் துன்பமில்லையென்று சொல்லித் தங்களின் தெய்வமாகிய விக்கிரகத்தை வணங்கித் துதித்துக் கடிதத்திற்குரிய வர்ணனைகளைக் கூட்டிச் சொல்லுவார்கள்.

 

1684. ஆதி நூலுரை தெரிதரு கபீபர சறிக

     வோது நன்னெறி மக்கமா நகரினி லுறைந்த

     சாதி யோர்களுந் தலைவரு மபூசகல் தானுங்

     கோதி லாதிவிண் ணப்பமென் றிருகரங் குவித்தே.

26

      (இ-ள்) வேத வசனங்களை யுணர்ந்த ஹபீபரசரவர்கள் அறிக: புகழா நிற்கும் நல்ல சன்மார்க்கத்தை யுடைய திருமக்கமாநகரத்தில் தங்கியிருக்கும் சாதியார்களும் தலைவர்களும் அபூஜகிலும் இரண்டு கைகளையும் குவியச் செய்து எழுதும் குற்றமற்ற விண்ணப்பமென்று சொல்லி.

 

1685. குபலு றைந்தநற் றலத்தினி லாசிமா குலத்தி

     லபுதுல் லாவயி னவதரித் தாமினா மகவாய்த்

     தவமி லாமுகம் மதுவெனும் பெயரினைத் தரித்துப்

     புவியி கழ்ந்திடப் பிறந்திருந் தனனொரு புதியோன்.

27

      (இ-ள்) குபலென்னும் நமது சுவாமியவர்கள் தங்கியிருக்கும் நன்மை பொருந்திய ஸ்தலமாகிய இந்தத் திருமக்கமா நகரத்தின்கண் பெருமையுற்ற ஹாஷீம் குலத்தில் அப்துல்லா வென்பவரிடத்திலிருந்து உற்பத்தியாய் ஆமினாவென்பவளின் மகனாக முகம்மதென்று சொல்லும் ஓரபிதானத்தைப் பூண்டு இப்பூலோகமானது நிந்தித்திடும் வண்ணம் தவமற்ற நூதனத்தை யுடையவனான ஒருவன் அவதரித்திருக்கின்றான்.

 

1686. சலதி யூடுறை கொடுவிட மெனத்தலை யெடுத்திட்

     டுலைவொ டன்னையுந் தந்தையு மிழந்தொரு தனியா

     யலகி லாதவஞ் சனைவிதத் தொழில்படித் ததனால்

     விலகு தற்கரி தாகிய மாயங்கள் விளைத்தான்.

28