பக்கம் எண் :

சீறாப்புராணம்

636


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் அவதரித்திருக்கின்ற அவன் சமுத்திரத்தின்கண் தங்கிய கொடிய விஷத்தைப் போலும் தலையெடுத்துத் தனது மாதாவையும் பிதாவையும் உலைவுடன் இழக்கப் பெற்று ஏகமாகக் கணக்கற்ற ஒப்பில்லாத வஞ்சனையினது தன்மையையுடைய செயல்களைக் கற்று அச்செயலினால் விலக்குதற் கருமையான மாயங்களை யுண்டாக்குகின்றான்.

 

1687.  அந்த நாட்குவை லிதுமக ளரசெனு மயிலைப்

     பிந்தி டாமண முடித்தன னவர்பெரும் பொருளாற் 

     சிந்தை யிற்கரு விதத்தொடு மதத்தொடுஞ் சிலநா

     ளெந்த மன்னவர் தம்மையு மாசரித் திணங்கான்.

29

      (இ-ள்) அன்றியும், அவன் அந்தக் காலத்தில் தாமதியாது குவைலிதரசனுடைய மகளென்று சொல்லும் மயிலான கதீஜாவை விவாகம் முடித்து அக்கதீஜாவென்பவரின் பெரிய செல்வத்தினால் சில காலமாய் மனசின்கண் செருக்குடனும் மதத்துடனும் எந்த அரசர்களையும் கைகொண்டு பொருந்த மாட்டான்.

 

1688. ஆண்டு நாற்பது சென்றபி னவனியி லெவருந்

     தூண்டி டாப்பெருங் கோட்டிக டொடுத்தவன் றுணிவாக்

     காண்ட காவிறை யொருவனுண் டெனுமொழி கணித்து

     மீண்டு மன்னவன் றூதனியா னெனுமுரை விரித்தான்.

30

      (இ-ள்) அன்றியும், அவனுக்கு நாற்பது வயது கழிந்த பிற்பாடு இப்பூலோகத்தின் கண் யாவரும் சுட்டிக் காட்டுதற்கரிய பெரிய கோட்டிகளைச் செய்ய ஆரம்பித்து அவன் தைரியமாகக் கண்களினாற் காணுதற்கு முடியாத கடவுள் ஒருவனுண்டுமென்று சொல்லும் வார்த்தையைக் கூறி, திரும்பவும் நான் அந்தக் கடவுளுடைய றசூலென்னும் வார்த்தைகளை விரித்துச் சொல்லுகின்றான்.

 

1689. தூத னியானெனக் காதிதன் றூய்மொழி புறுக்கான்

    வேத மொன்றிறங் கிற்றெனப் பலரொடும் விரித்தான்

    பூத லத்திலெவ் விடத்தினுஞ் சிரந்தரை புரள

    வீத லானெறி யிலையென விழுந்தெழுந் திடுவான்.

31

      (இ-ள்) அன்றியும், பல ஜனங்களோடும் நான் றசூல், எனக்குக் கடவுளின் பரிசுத்தமான வார்த்தைகளாகிய புறுக்கானுல் அலீமென்னும் ஒரு வேதம் இறங்கிற்றென்று விரிவாய்ச் சொல்லுகின்றான். இப் பூலோகத்தின்கண் இஃதல்லாமல் சன்மார்க்கம் வேறே

யாதொன்று மில்லையென்று சொல்லி எந்த இடங்களிலும் தலையானது பூமியின்கண் புரளும் வண்ணம் விழுந்து எழும்புகின்றான்.