பக்கம் எண் :

சீறாப்புராணம்

735


முதற்பாகம்
 

வரிசையாய் இருந்து பிரகாசியா நிற்கும் முன் கைகளையுடையவள்.

 

1965. குலிகமார்ந் தனபோ லரக்கினுஞ் சிவந்த

          கொழுமடற் காந்தளங் கரத்தாள்

     மலிசினைக் கெளிற்றின் வனப்பினும் வனப்பாய்

          மணியணி சுமந்தமெல் விரலாள்

     பொலிவுறச் சிவந்தீந் திலையெனக் கிளர்ந்து

          புனக்கிளி நாசியின் வடிவாய்

     நலிவிலா திளைத்த வயிரவொண் கதிராய்

          நலங்கிடந் திலங்கிய வுகிராள்.

27

      (இ-ள்) அன்றியும், சாதிலிங்கம் ஆர்ந்தமைப்போல அரக்கைப் பார்க்கிலும் சிவப்புற்ற செழிய இதழ்களையுடைய அழகான காந்தட் புஷ்பத்தை நிகர்த்த கைகளையுடையவள். மிகுந்த சினையினைக் கொண்ட கெளிற்றினது அழகிலும் அழகாய் இரத்தினக் கணையாழிக ளணியப் பெற்ற மெல்லிய விரல்களையுடையவள். மிகவாய்ச் சிவந்து ஈத்த மரத்தி னிலையை யொத்துப் பிரகாசித்துக் கொல்லைகளிலுறையா நிற்கும் கிளியினது நாசியின் வடிவ மாக நலிவில்லாமல் செய்யப்பட்ட வைரத்தினது ஒள்ளிய கிரணமாய் நன்மையானது கிடந்து பிரகாசிக்கின்ற நகத்தை யுடையவள்.

 

1966. தடித்தடி பரந்திட் டெழுந்துபூ ரித்துத்

          தளதளத் தொன்றொடொன் றமையா

     தடர்த்திமை யாத கறுத்தகண் ணதனா

          லருந்தவத் தவருயிர் குடித்து

     வடத்தினு ளடங்கா திணைத்தகச் சறுத்து

          மதகரிக் கோட்டினுங் கதித்துப்

     படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி படர்ந்த

          பருமிதத் துணைக்கன தனத்தாள்.

28

      (இ-ள்) அன்றியும், தடிப்புற்று அடி பரந்து மேலோங்கிப் பூரிப்புக் கொண்டு தளதளப்பாகி ஒன்றுடனொன்று அடங்காது நெருங்கி இமைக்கப் பெறாத கறுப்புத் தங்கிய கண்களினால் அருமையான தவத்தை யுடைய பெரியோர்களி னாவியை அருந்தி வடத்திற்குள் அமையாமல் கட்டிய இரவிக்கையைக் கீறிக் கன்னமதம், கைமதம், கோசமத மென்னும் மும்மதங்களையுடைய யானைகளினது கொம்பைப் பார்க்கிலும் தழைத்துச் சர்ப்பத்தினது படத்தைப் பார்க்கிலும் பிரகாசியா நிற்கும் தேமலானது வரிசையாய்ப் படரப்பெற்ற பருமிதமமைந்த கனத்த இரு தனங்களை யுடையவள்.