பக்கம் எண் :

சீறாப்புராணம்

74


முதற்பாகம்
 

வாழ்த்தெடுக்கும்படி வாசனையானது இலங்கப் பெற்ற புஷ்பமாலையைத் தரித்த செழிய ஆபரணங்களைக் கொண்ட கழுத்தில் கத்தியின் நுதியானது தடவப் பெற்றிலது.

 

     151. மன்னவ னிசுமா யீல்தரு மதலை

              மணிவிளக் கனையதா பித்து

         தன்னிடந் திருந்து தரணியேழ் புரக்குந்

              தலைபதி நிலைபெற வியற்றி

         மின்னவிர் மௌலி விளங்குதா பித்து

              வேந்தன்பெற் றெடுத்தமா மதலை

         யிந்நிலம் புகழு மெசுகபு வெனும்பே

              ரெடுத்தவ னிடத்திலங் கியதே.

53

     (இ-ள்) அரசராகிய நபி இசுமாயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் இவ்வுலகத்தின்கண் தந்த புதல்வரான அழகிய தீபத்தை நிகர்த்த தாபித்தென்பவரிடத்தில் அவ்வொளிவானது தங்கியிருந்து ஏழு பூமிகளையும் அரசாட்சி செய்யும் தலைமைக் தனத்தையுடைய இராஜராய் நிலைபெறும்படி யாக்கி மின்னானது பிரகாசிக்கின்ற கிரீடம் விளங்கிய அந்தத் தாபித்தென்னும் மன்னவர் பெற்றெடுத்த பெருமை பொருந்திய மைந்தர் இப்பூமியானது துதியாநிற்கும் எசுஹபென்னும் அபிதானத்தை எடுத்தவரிடத்திலிருந்து திகழ்ந்தது.

 

     152. உடல்பிளந் துயிருண் டுதிரங்கொப் புளித்தூ

              னுணங்குவேற் கரனெசு கபுதன்

         பிடிநடை மடவாள் பெற்றெடுத் துவந்த

              பிள்ளையஃ றுபுவயி னிருந்து

         கடல்கிளர்ந் தனைய தானையஃ றுபுதன்

              கண்மணி தயிறகு என்போ

         ரிடமுற விருந்து நெடும்புகழ் விளக்கி

              யெழில்கனிந் திலங்கிய தன்றே.

54

     (இ-ள்) சரீரத்தைப் பிளக்கச் செய்து ஆவியை யருந்தி, இரத்தத்தைக் கொப்பளித்து மாமிசமானது உணங்கப் பெற்ற வேலாயுதத்தைத் தாங்கிய கைகளையுடையவரான அந்த எசுஹ பென்பவரின் பெட்டை யானை போலும் நடையைக் கொண்ட இளம்பருவத்தையுடைய நாயகியானவர் ஈன்றெடுத்த விருப்பமுற்ற புத்திரர் எஃறு பென்பவரினிடத்தில் அவ்வொளியானது தங்கியிருந்து சமுத்திரமானது கிளர்ந்ததை யொத்த படைகளையுடைய அந்தெஃறு பென்பவரின் கண்களினது மணியைப் போன்ற மைந்தர் தயிறகென்பவரி னிடத்தில் பொருந்தும்படி யிருந்து நெடிய கீர்த்தியைச் செய்து அழகானது கனிவுற்றுப் பிரகாசித்தது.