பக்கம் எண் :

சீறாப்புராணம்

746


முதற்பாகம்
 

1994. உரைவி ளக்கிட முகம்மதுந் தோழர்க ளுடனும்

     விரைவி னேகிப்பொன் றடுத்தவ ரெவரென வினவத்

     தரையி லியானல திலையென வபூசகல் சாற்ற

     வருள்கி டந்தகட் கடைசிவப் புண்டவப் போதில்

21

      (இ-ள்) அவ்வாறு அவர்கள் அச்சமாச்சாரத்தை விளக்கிக் கூற நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் தங்களின் தோழர்களோடும் விரைவாக அத்தானத்திற்குச் சென்று இப்பொன்னைத் தடை செய்தவர் யாவரென்று கேட்க அபூஜகி லென்பவன் இவ்வுலகத்தின்கண் யானல்லாது வேறு ஒருவருமில்லரென்று சொல்ல, அந்நபிகட் பெருமானவர்களின் கிருபையானது கிடக்கப் பெற்ற கடைக் கண்களானவை சிவப்புண்டன அந்தச் சமயத்தில்.

 

1995. உனக்கு வந்தது மோங்கிய தீன்முகம் மதுசீர்

     தனக்கு வந்ததுங் கொணர்ந்தவர் சொல்குவர் சரதஞ் 

     சினக்க வந்திவண் மறிப்பது தகுவதோ செலுநின்

     மனைக்கெ னச்சிலர் கூறலு மனத்திடை கொதித்தான்.

22

      (இ-ள்) சில ஜனங்கள் அபூஜகிலைப் பார்த்து இத் திரவியங்களனைத்தும் உனக்கு வந்ததும், சிறப்போங்கப் பெற்ற தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடைய முகம்மதுக்கு வந்ததும், அவைகளைக் கொண்டு வந்தவர்கள் இன்னாருக்கென்று சத்தியத்தைச் சொல்லுவார்கள். நீ இங்கு கோபத்துடன் வந்து மறிப்பது தகுவதா? அல்ல ஆதலால் உனது வீட்டிற்குச் செல்லுவாயாக வென்று கூறிய மாத்திரத்தில் அவ்வபூஜகி லென்பவன் மனசின்கண் கொதிக்கலானான்.

 

1996. மட்டு வார்பொழிற் றிமஸ்குமன் னவர்வர விடுத்த

     பெட்ட கத்தையும் பொன்னையும் பிணக்கறக் கரியாய்ப்

     பட்ட றத்தெளிந் துமக்கெமக் கெனப்பல ரறிய

     வொட்டை வாய்திறந் துரைக்குமெ றபூசகு லுரைத்தான்.

23

      (இ-ள்) அவ்விதம் கொதித்த அபூஜகி லென்பவன் தேன் ஒழுகா நிற்கும் சோலைகளை யுடைய திமஸ்கு நகரத்தினது அரசனான ஹபீபென்பவன் அனுப்பிய பெட்டகத்தையும் பொன்னையும் உமக்கு அல்லது எமக்கென்று யாவர்களு முணரும் வண்ணம் யாதொரு பிணக்குமின்றி மிகவுந் தெளிந்து அவ்வொட்டகங்ளே தமது வாய்களைத் திறந்து சாட்சியாக ஏற்பட்டுக் கூறுமென்று கூறினான்.