பக்கம் எண் :

சீறாப்புராணம்

747


முதற்பாகம்
 

1997. உரைத்த வாய்மையிங் கெமக்கியை வதுபடி றுளத்தோய்

     விரித்துக் கேட்டரு ளென்றன ரபூசகல் விரைவி

     னிருத்தி யிப்பொரு ணாளையிவ் வூரவ ரறியப்

     பரித்த வொட்டகங் கரிபகர்ந் திடுமெனப் பகர்ந்தான்.

24

      (இ-ள்) அவன் அவ்வாறு கூற நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அசத்தியத்தைக் கொண்ட மனத்தை யுடைய அபூஜகிலே! நீ இவ்விடத்தில் கூறிய சமாச்சாரம் எமக்கும் பொருந்திற்று அஃதை விரித்துக் கேட்பாயாக வென்று சொன்னார்கள். அதற்கு அபூஜகி லென்பவன் இன்றைய தினம் இத்திரவியங்களை இங்கு இருக்கும்படி செய்து நாளை இத்திரு மக்கமாநகரத்திலுள்ள யாவர்களும் அறியும் வண்ணம் இச்சமாச்சாரத்தைப் பற்றிச் சுமைகளைத் தாங்கிய இவ்வொட்டகங்க ளானவை விரைவில் சாட்சி கூறுமென்று கூறினான்.

 

1998. நன்று நன்றெனத் தோழரு முகம்மது நபியும்

     பொன்றி கழ்ந்தெழில் குலவிய மனையிடை புகுந்தார்

     கன்று புன்மனத் தபூசகல் கிளையுடன் கடிதிற்

     சென்று வெண்மலர் செறிதரு மாலயஞ் சேர்ந்தான்.

25

      (இ-ள்) அவ்விதம் கூறவே, நாயகம் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் அவர்களின் தோழன்மார்களும் நல்லது! நல்லது!! என்று சொல்லிக் கொண்டு பொன்னினாற் பிரகாசித்து அழகு குலவப் பெற்ற தங்கள் மாளிகையின்கண் போய் நுழைந்தார்கள். கன்றிய கீழ்மையான மனத்தையுடைய அபூஜகி லென்பவனும் தனது பந்துக்களோடும் விரைவாய்ச் சென்று வெள்ளிய புஷ்ப மாலைகள் நெருங்கிய கோவிலினிடத்திற் போய்ச் சேர்ந்தான்.

 

1999. ஆல யம்புகுந் தழியுரு வெடுத்தபுத் ததற்குச்

     சால மென்மலர்த் தொடையொடும் பலமணி தரித்துக்

     கோல மார்ந்தெழத் தீபமுந் தூபமுங் கொடுத்துத்

     தால மீதினிற் சிரம்பட விருகரந் தாழ்த்தான்.

26

      (இ-ள்) அவ்வாறு கோவிலின்கண் போய் நுழைந்து அழிந்து போகும் சொரூபத்தை எடுத்த அங்குள்ள புத்துகானுக்கு அழகானது அதிகரித்து ஓங்கும் வண்ணம் மிகவும் மெல்லிய மலர்களாகிய மாலைகளோடும் பல ஆபரணங்களைப் பூட்டி தீபமுந் தூபமுங் கொடுத்துப் பூமியின் மீது தனது தலையானது படும்படி இரண்டு கைகளையும் பணித்தான்.