பக்கம் எண் :

சீறாப்புராணம்

758


முதற்பாகம்
 

வாசனையை உயிர்க்கப் பெற்ற சோலைகள் பிரகாசியா நிற்கும் ஹபஷா வென்னும் நல்ல நகரத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2031. சென்ற தூதுவர் வரிசைக ளனைத்தையுந் திருந்தக்

     குன்றெ னத்திரள் புயனசா சியின்முனங் குவித்து

     முன்றி லிற்றனித் தெழுதிய முடங்கலை யெடுத்து

     நின்று நீட்டினர் நிருபர்க ணெருங்கிய சபையில்.

17

      (இ-ள்) அவ்வாறு போன தூதுவர்களிருவரும் அந்த வரிசைக ளெல்லாவற்றையும் செவ்வையாக மலையைப் போலும் திரண்ட தோள்களை யுடையவனான நஜாசி யென்னும் அரசனது முன்னர் குவித்து விட்டு மன்னவர்கள் செறிந்த அந்தச் சபையின்கண் முற்றத்திற் நின்று கொண்டு அவ் வபூஜகி லென்பவன் வரைந்த நிருபத்தைத் தனித்து எடுத்து நீட்டினார்கள்.

 

2032. வரைந்த பத்திரப் பாசுர மக்கமா நகரி

     லிருந்த ஹாசிமா குலத்தொரு வன்றலை யெடுத்து

     விரிந்த மந்திர வஞ்சக மாயங்கள் விளைத்துத்

     தெரிந்த வேதமுஞ் சமயமு நிலைகெடச் சிதைத்தும்.

18

      (இ-ள்) அவ்விதம் நீட்டிய, எழுதிய அந்தக் கடிதத்தினது வாசக மாவது, மக்கமா நகரத்தில் தங்கிய மகத்தான ஹாஷிம் குலத்தில் ஒரு மனிதன் தலையெடுத்து விரிந்த மந்திரங்களும், வஞ்சகங்களும், மாயங்களும், செய்து நாமனைவரு முணர்ந்த நமது வேதத்தையும் மார்க்கத்தையும் தனது நிலைமையானது கெடும் வண்ணம் சிதையச் செய்தும்.

 

2033. குடிபொ ருந்திலா திந்நகர்க் குலம்பழு தாக்கிப்

     படிப குத்திடக் கொலையொடு பாதகம் விளைத்து

     முடிவி லாப்பெருந் தேவத மாலய முழுது

     மடிய றுத்திடத் துணிந்தனன் முகம்மதென் பவனே.

19

      (இ-ள்) குடியோடும் சேராமல் இந்த மக்கமா நகரத்தினது கூட்டத்தைக் குற்றப் படுத்திப் பூமியைப் பாதிக்கும்படி கொலையுடன் பாதகங்களைச் செய்து முடிவற்ற பெரிய தேவதங்களை யுடைய கோவில்க ளெல்லாவற்றையும் மூட்டோடு அறுக்கும் வண்ணம் துணிந்தனன். அவன் முகம்மதென்னும் அபிதானத்தையுடையவன்.

 

2034. அங்க வன்மொழிக் கொழுகின ரவனினுங் கொடியோர்

     பொங்கு மவ்வுழை புகுந்தன ரபசிமா புரத்தைப்

     பங்க மாக்குமு னவர்களைத் தண்டனை படுத்தி

     யெங்கி ருக்கினு மிருக்கொணா தகற்றிடு மெனவே.

20