பக்கம் எண் :

சீறாப்புராணம்

778


முதற்பாகம்
   

நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு அந்த மானானது தனது சமாச்சாரத்தைக் கூறத் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று இருதயத்தின்கண் காருண்ணியம் அதிகரித்து அந்தக் காட்டினது வேடனைப் பார்த்து இந்த மானானது தனது குட்டியினிடத்துள்ள துன்பத்தை யொழித்து மீண்டு இங்கு வருமட்டும் அதற்கு பதிலாக யான் பிணையென்று கூறி நின்றார்கள்.

 

2092. பிரியமுற் றிரங்கிக் காட்டின் பிணைக்கியான் பிணையென் றோது

     முரையினைக் கேட்டு வேட னொண்புயங் குலுங்க நக்கித்

     தெரிதரு மறிவி னோடுஞ் சினத்தொடுங் கலந்து தேர்ந்து

     கருமுகிற் கவிகை வள்ளல் கவின்முக நோக்கிச் சொல்வான்.

41

      (இ-ள்) அவ்வாறு அன்புற்று இரங்கிக் கானகத்தின்கண் சஞ்சரியா நிற்கும் மானுக்கு நான் பிணையென்று கூறும் வார்த்தைகளைத் தனது காதுகளினாற் கேட்டு அந்த வேட்டுவன் ஒள்ளிய தோள்கள் குலுங்கும் வண்ணம் சிரித்துத் தெரிந்த தன் புத்தியோடும் கோபத்தோடும் கலந்து தேர்ச்சி கொண்டு கரிய மேகக் குடையை யுடைய வள்ள லாகிய நாயகம் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் அழகிய முகத்தைப் பார்த்துச் சொல்லுவான்.

 

2093. முள்ளுடைக் கானி லேகி முகமழிந் துச்சி வேர்வை

     யுள்ளங்கா னனைப்ப வோடி யுடலுலைந் தொன்றுங் காணா

     விள்ளரும் பசியான் மீளும் வேளையிப் பிணையை நோக்கி

     யொள்ளிழை வலையிற் றாக்கிப் பிடித்திவ ணொருங்கு சார்ந்தேன்.

42

      (இ-ள்) முட்களை யுடைய காட்டின்கண் சென்று எனது முகமானது அழியப் பெற்று உச்சியினது வேர்வை உள்ளங்காலை நனைக்கும் வண்ணம் ஓடிச் சரீரம் சீரழிந்து ஒரு மிருகத்தையும் காணாது சொல்லுதற் கரிய பசியினால் திரும்பா நிற்கும் சமயத்தில் இம்மானைக் கண்டு ஒள்ளிய இழைகளை யுடைய வலையினால் பாய்ந்து பிடித்து ஒருங்குடன் இவ்விடத்தில் வந்து சேர்ந்தேன்.

 

2094. பெருத்தமான் றசையா லிற்றைப் பெரும்பசி தவிர்ந்த தென்று

     ளிருத்தியிங் கிருந்தே னந்த விருமனக் களிப்பை நீக்கி

     வருத்தமுற் றிடுஞ்சொற் சொன்னீர் முகம்மதே யெவர்க்கு மிச்சொற்

     பொருத்தம தன்று விண்ணு மண்ணினும் புகழின் மிக்கோய்.

43