முதற்பாகம்
(இ-ள்) ஆகாயத்தின் கண்ணும்
பூலோகத்தின் கண்ணும் கீர்த்தியினால் மிகுந்த நபிகட்
பெருமானே! முகம்மதென்னும் திருநாமத்தை யுடையவரே!
பருப்பமுற்ற இந்த மானினது மாமிசத்தால் இன்றைய
பொழுதின் பெரிய பசியானது ஒழிந்ததென்று இருதயத்துள்
இருக்கும்படிக்கு செய்து இவ்விடத்தில் தங்கியிருந்தேன்.
அந்தப் பெரிய மனச்சந்தோஷத்தை மாற்றித்
துன்பமுற்றிடும் வார்த்தைகளைக் கூறினீர்.
இவ்வார்த்தைகள் யாவர்களுக்குஞ் சம்மதமானவையல்ல.
2095. கானிடைப் பிடித்த
மானைக் கட்டவிழ்த் தவணிற் போக்கின்
மானிடர் பாலின் மீட்டும் வருவது முன்ன ருண்டோ
ஞானமு மறையுந் தேர்ந்தோர் செய்யுளு நாட்டிற் றுண்டோ
வூனமிப் பிணைச்சொ லையா வோதுவ தொழிக வென்றான்.
44
(இ-ள்) அன்றியும் ஐயாவே!
காட்டின்கண் பிடித்த மானை அதன் கட்டுகளை யவிழ்த்து
அந்தக் காட்டி னிடமாகப் போகச் செய்தால்
திரும்பியும் மாந்தர்களிடத்து வருவது ஆதியிலுளதா?
ஞானத்தைக் கொண்ட முன்னுள்ள மூன்று வேதங்களையும்
கற்றுத் தெளிந்தவர்கள் செய்யுட்களும் அவ்வாறு வருமென்று
இவ்வுலகத்தின்கண் நாட்டிற் றுளதா? இல்லையே! ஆதலால்
இந்தப் பிணையென்று கூறும் வார்த்தை குற்றமானது. அதைக்
கூறுவதை ஒழித்துப் போடுங்களென்று சொன்னான்.
2096. என்னுறு பிணையாய்ப்
போன விரும்பிணை கடிகைப் போதி
னுன்னிடத் துறும்வா ராதே லுன்பசி தீர்ப்ப தாகப்
பின்னிரண் டொன்றுக் கன்பாய்த் தருகுவன் பேது றேலென்
றன்னவன் றனக்குச் சொன்னா ராரணத் தமிர்தச்
சொல்லார்.
45
(இ-ள்) வேடன் அவ்வாறு சொல்லப்
புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது அமிர்த
வார்த்தைகளை யுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பொருந்திய எனது
பிணையாகச் செல்லும் பெரிய பெண் மானானது ஒரு நாழிகை
நேரத்தில் திரும்பி உனது பால் வந்து சேரும். அவ்விதம்
வாராதிருக்குமானால் உனது பசியைத் தீர்ப்பதற் காகப்
பின்னர் அன்புடன் ஒரு மானுக்கு இரண்டு மான் தருவேன். நீ
உன் அறிவானது கலக்க மடைய வேண்டா மென்று அவனுக்குக்
கூறினார்கள்.
2097. காரணக் குரிசில் கூறுங்
கட்டுரை செவியி னோர்ந்து
பாரினி லெவர்க்குந் தோன்றாப் புதுமைபார்த் தறிவோ
மல்லாற்
சார்பினிற் சாரா லொன்றுக் கிரண்டுமே தருது மென்றார்
பேரினிற் பிணையாய்க் கொள்ளல் கருத்தெனப் பெரிதுட்
கொண்டோன்.
46
|