பக்கம் எண் :

சீறாப்புராணம்

780


முதற்பாகம்
 

      (இ-ள்) காரணத்தைக் கொண்ட குரிசிலாகிய நமது நாயகம் எம் மறைக்குந் தாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கூறும் உறுதியான வார்த்தைகளை அவ்வேடன் தனது செவிகளினாற் கேள்வியுற்று அறிந்து இப் பூலோகத்தின்கண் யாவர்களுக்கும் வெளிப்படாத ஆச்சரியத்தைக் கண்களாற் பார்த் துணர்வோம்; அல்லாமலும், இம் மான் நமது சார்பில் வந்து சாரா விட்டால் ஒரு மானுக்கு இரண்டு மான் தருவே னென்று சொன்னார். இவர் பேரில் பிணையாகக் கொள்ளுதல் கருத்தென்று பெரிதாய்ச் சிந்தையின்கண் எண்ணினான்.

 

2098. கள்ளமுங் கரப்பு மாறாக் கருத்தின னுயிர்கட் கென்று

     மெள்ளள விரக்க மில்லா வேட்டுவ ரினத்தி னுள்ளே

     னுள்ளம தறிந்துங் கேட்டீ ருரைப்பதென் னுயர்ந்த மேன்மை

     வள்ளனும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்தி ரென்றான்.

47

      (இ-ள்) அவ்வாறு எண்ணிய வேட்டுவன், ஓங்கிய மேன்மையைக் கொண்ட வள்ள லாகிய முகம்ம தென்னுந் திரு நாமத்தையுடையவரே! திருட்டும்  ஒளிப்பும் நீங்காத சிந்திப்பை யுடையவனும் ஜீவப் பிராணிகளுக்கு எக்காலமும் எள்ளினது அளவாயினும் இரக்க மில்லாத வேடர்களின் குலத்தி லுள்ளவனுமான எனது இருதயத்தை யுணர்ந்தும் தாங்கள் இவ்வாறு கேட்டீர்கள். அதற்கு பதிலாக உரைப்பது யாது? ஒன்று மில்லை. உங்களது இனிமை தங்கிய வார்த்தைகளை யான் மறுத்தவனல்லேன். மானை விட்டு விடுங்களென்று சொன்னான்.

 

2099. வேட்டுவ னுரைப்பக் கேட்டு முகம்மது விருப்ப முற்று

     வாட்டமுற் றிருந்த புள்ளி மானிடத் திருந்து பாரி

     னீட்டிய காலிற் சேர்த்த துடரினை நெகிழ்த்துக் கானிற்

     கூட்டுறாக் குழவிக் குப்பால் கொடுத்திவண் வருக வென்றார்.

48

      (இ-ள்) வேடனானவன் அவ்வாறு சொல்ல, நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று விருப்பமாய் மெலிவடைந்திருந்த அந்த புள்ளிகளை யுடைய மானினது இடத்தில் உட்கார்ந்து பூமியின்கண் நீட்டிய காலிற் பொருத்திய கயிற்றை நெகிழும்படி அவிழ்த்துக் காட்டினகம் கூட்டுத லுறாத குட்டிக்கு அமுத மளித்து இவ்விடத்திற்கு வருவாயாக வென்று கூறினார்கள்.