பக்கம் எண் :

சீறாப்புராணம்

781


முதற்பாகம்
 

2100. இருந்துகான் மடக்கி நீட்டி யெழுந்துடன் முறுக்கு நீக்கி

     மருந்தெனு மமுதத் தீஞ்சொன் முகம்மதின் வதன நோக்கிப்

     பொருந்திய கலிமா வோதிப் புகழ்ந்துடற் பூரிப் போடுந்

     திருந்தவே டனையும் பார்த்துச் சென்றது கானின் மானே.

49

      (இ-ள்) அவ்விதம் கூறவே அந்த மானானது இருந்து தனது கால்களை மடித்து நீட்டி எழும்பிச் சரீரத்தினது திருக்கை மாற்றி மருந்தென்று சொல்லா நிற்கும் அமுதம் போன்ற இனிய வார்த்தைகளையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முகத்தைப் பார்த்து “லாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹி” என்று பொருந்திய கலிமாவைக் கூறித் துதித்துத் தேகப் பூரிப்புடன் செவ்வையாக வேட்டுவனையும் பார்த்துக் கொண்டு காட்டின்கண் சென்றது.

 

2101. வெண்ணிலாக் கதிர்கான் றென்ன மென்முலை சுரந்த தீம்பான்

     மண்ணெலா நனைப்பச் சூழ்ந்த வனமெலாந் திரிந்து தேடிக்

     கண்ணினி லினங்கா ணாது கலங்கியோர் வனத்தின் கண்ணே

     யெண்ணரும் பிணையுங் கன்றுங் கலையுட னினிது கண்ட.

50

      (இ-ள்) அவ்விதம் சென்ற மானானது வெண்மையைக் கொண்ட சந்திரனது கிரணங்கள் பிரகாசித்தன போலும் மெல்லிய முலையின் கண்ணிருந்து சுரப்புற்ற இனிய அமுத மானது பூமி முழுவதையும் நனையும் படி செய்யத், தன்னினங்களை வளைந்த காடுகளெல்லாவற்றிலும் திரிந்து தேடிக் கண்களிற் காணாது கலக்கமுற்றிருந்தபின் ஓர் காட்டினிடத்து எண்ணுதற் கரிய மான்களையும் தனது குட்டியையும் ஆண்மானோடு இனிமையுடன் கண்டது.

 

2102. மலைவற வினத்து ளாகி மனத்தினுட் கவலை நீக்கிக்

     கலையினுள் வருத்தந் தீர்த்துக் கன்றினை யணைத்து விம்மு

     முலையினை யூட்டி மென்மை முதுகுவா லடிநா நீட்டி

     யலைதர வளைத்து மோந்து வேட்கையை யகற்றிற் றன்றே.

51

      (இ-ள்) அவ்வாறு கண்ட அம் மானானது மயக்கமறும் வண்ணம் தனது கூட்டத்தின் உட் பக்கத்திலாகி இருதயத்தினகமுள்ள விசாரங்களை யொழித்துத் தன் ஆண்மானின் மனத்துன்பத்தையும் நீக்கிக் குட்டியைச் சேர்த்து விம்முகின்ற முலையினது பாலை யுண்ணும்படி யுண்பித்து மெல்லிய முதுகையும் வாலையும் பாதங்களையும் நாவை நீட்டி அசையும்படி வளைத்து முத்தித் தன்னாசையை ஒழித்தது.