முதற்பாகம்
2103. கன்றது வயிறு வீங்கக்
கதிர்முலை யமுத மூட்டி
நின்றதன் னினத்துக் கெல்லா நெறிபடுங் கானி லோடி
வன்றிறல் வேடன் கையிற் படும்வர வாறுந் தூதர்
வென்றிகொள் பிணையின் மீட்டு விட்டது மோதிற் றன்றே.
52
(இ-ள்) அவ்வாறு கன்றுக்குத் தன்
வயிறானது பருக்கும்படி பிரகாசத்தை யுடைய முலையினது பாலை
யுண்பித்து அங்கு கூடி நின்ற தனது கூட்டத்திற் கெல்லாம்
தான் நெறிபடா நிற்கும் கானகத்தின்கண் ஓடிக் கொடிய
வலிமையையுடைய வேட்டுவன் கையில் அகப்பட்ட
வரலாற்றையும் ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவரான
நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் வெற்றியைக் கொண்ட தமது
பிணையினால் திருப்பி விட்டதையுங் கூறிற்று.
2104. பிணையென வுரைத்த
மாற்றம் பிணைக்குல மனைத்துங் கேட்டுப்
பணைபடு கானி லுள்ளப் பதைப்பொடுந் துணுக்கி நிற்பத்
துணையெனுங் கலையி னங்கஞ் சோர்ந்துநெட் டுயிர்ப்பு
வீங்கி
யணைதர வடுத்து நோக்கி யாற்றுவான் றொடங்கிற் றன்றே.
53
(இ-ள்) அவ்வாறு நாயகம் நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பிணை யென்று கூறிய
வார்த்தைகளை அங்கு கூடி நின்ற மானின் கூட்டங்க ளியாவும்
தங்களின் காதுகளினாற் கேள்வியுற்று மூங்கிலைக் கொண்ட
அக்கானகத்தில் மனப்பதறுத லுடன் துணுக்குதலடைந்து நிற்க,
தனது துணையென்று கூறா நிற்கும் ஆண்மானின் சரீரமானது
வாடிப் பெருமூச்சு விட்டு உதவியைச் செய்யும் வண்ணம்
சமீபித்துப் பார்த்து அப் பெண்மானின் துன்பங்க
ளியாவையும் ஆற்றுவதற்கு ஆரம்பித்தது.
2105. மாறுகொண் டவர்கை
தப்பி வந்தமா னினத்தின் சாதி
கோறலை விரும்பி முன்னு நரர்கையிற் கூடிற் றுண்டோ
வேறுரை பகரேல் பார்ப்பை வெறுத்துமுன் னினத்தை நீத்து
மீறெனப் போதல் வேண்டா மெனுமுறை யியம்பிற் றன்றே.
54
(இ-ள்) அன்றியும், விரோதத்தைக்
கொண்டவர்களான அந்த மாந்தர்களின் கையில் நின்றுந்
தவறி வந்த மான் கூட்டத்தினது சாதியானது கொல்லுதலை
ஆசித்து ஆதியிலும் நரர்களாகிய அம்மானுஷீகரின்
கரத்திற் போய்ச் சேர்ந்த துளதா? இல்லையே! நீ வேறு
விதமான வார்த்தைகளைப் பேசக் கூடாது. உனது குட்டியை
வெறுத்தும் கூட்டத்தை யொழித்தும் நமக்கு இதுவே முடிவென்று
போக வேண்டாமென்னும் சமாச்சாரத்தைக் கூறிற்று.
|