பக்கம் எண் :

சீறாப்புராணம்

786


முதற்பாகம்
 

2115. அன்னது கேட்டு வேட னோக்கியன் புற்ற காலை

     முன்னிய கன்று மானு முகம்மதி னடியிற் றாழ்ந்து

     பன்னிய சலாமுங் கூறிப் பாவியெற் காக வேட்டு

     மன்னிய பிணையை மீட்டு மெனுமுரை வழங்கிற் றன்றே.

64

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் கூற அவ்வேட்டுவன் அந்த வார்த்தைகளைத் தனது காதுகளினாற் கேள்வி யுற்றுப் பார்த்து நேசமடைந்த சமயத்தில், நினையா நிற்கும் அக்குட்டியும் மானும் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பாதங்களில் பணிந்து ஓதுகின்ற சலாமும் சொல்லிப் பாவியாகிய எனக்காக விரும்பிப் பொருந்திய தங்களின் பிணையை மீட்டிக் கொள்ளுங்க ளென்னும் வார்த்தைகளைக் கூறிற்று.

 

2116. மாடுறைந் திவைமான் கூற முகம்மது நபியும் விற்கை

     வேடனை விளித்து நந்தம் பிணையினை விடுத்து நின்றன்

     பீடுடைப் பசியை மாற்றிப் பெரும்பதிக் கடைக வென்றார்

     வீடுபெற் றுயர்ந்து வாழ்ந்தே னெனமலர்ப் பதத்தின் வீழ்ந்தான்.

65

      (இ-ள்) அந்த மானானது பக்கத்தில் தங்கி இவைகளைச் சொல்ல நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் வில்லைத் தாங்கிய கையையுடைய அந்த வேட்டுவனை யழைத்து நமது பிணையைத் தள்ளி உனது துன்பத்தைக் கொண்ட பசியை நீக்கிப் பெருமையை யுடைய ஊருக்குப் போய்ச் சேர்வாயாகவென்று சொன்னார்கள். உடனே அவன் நான் சொர்க்கலோகத்தைப் பெற்று மேன்மையுற்று வாழ்ந்தேனென்று சொல்லி அந்நபிகட் பெருமானின் தாமரை மலரை யொத்த திருவடிகளில் வீழ்ந்தான்.

 

2117. பாதபங் கயத்தைப் போற்றிப் பருவர லகற்றி யாதி

     தூதுவ ரிவரே யல்லா லிலையென மனத்திற் றூக்கி

     வேதநா யகமே யென்பால் விருப்புறுங் கலிமாத் தன்னை

     யோதுமென் றிருகை யேந்தி யுவந்துநின்றுரைப்ப தானான்.

66

      (இ-ள்) அவ்வாறு பாதங்களாகிய தாமரை மலரைத் துதித்துத் தனது துன்பங்களை யொழித்து யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவர் இந்த முகம்மதென்பவரே யல்லாமல் வேறு ஒருவரு மில்லரென்று மனசின்கண் சிந்தித்து நான்கு வேதங்களுக்கும் நாயக மாகிய நபிகட் பெருமானே! என திடத்திற் ஆசை பொருந்திய உங்களது கலிமாவை ஓதுங்க ளென்று விருப்புற்று இரண்டு கைகளையு முயர்த்தி நின்று கூறலானான்.