பக்கம் எண் :

சீறாப்புராணம்

787


முதற்பாகம்
 

2118. கருமுகிற் கவிகை வேந்தே கானக வேட னென்னு

     முருவினன் விலங்கோ டொப்பே னுள்ளரி வுணர்வு மில்லேன்

     றெருளுறப் பாவி யென்னைத் தீனிலைக் குரிய னென்னப்

     பெரிதளித் திடுதல் நுந்தம் பெருமையிற் பெருமை யென்றான்.

67

      (இ-ள்) அன்றியும், கரிய மேகக் குடையினது அரச ராகிய முகம்ம தென்னும் திருநாமத்தை யுடைய நபிகள் நாயகமே கானகத்தினது வேட்டுவ னென்னும் வடிவத்தையுடையவனும், மிருகங்களுக்கு நிகராகப் பட்டவனும், மனசின்கண் அறிவாகிய உணர் வில்லாதவனும் பாவியு மாகிய என்னைத் தெருட்சி யுறும் வண்ணம் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற்கு உரிமையனென்று சொல்லப் பெருமையோடும் புரப்பது உங்களது பெருமையிற் பெருமை யென்று கூறினான்.

 

2119. மதிமுக மகிழ்ச்சி கூர முகம்மது கலிமாச் சொல்ல

     விதயமுற் றோதி வேட னினிதினி னீமான் கொண்டு

     புதியனை வணங்கிச் செய்யுஞ் செய்தொழில் பொருந்தக் கேட்டு

     நிதிமனைக் குரிய னாகித் தீனிலை நெறிநின் றானே.

68

      (இ-ள்) அவ்வாறு அந்த வேட்டுவன் கூற நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் சந்திரனை நிகர்த்த முகத்தின்கண் சந்தோஷம் அதிகரிக்கும்படி “லாயிலாஹ இல்லல்லாகு முகம்ம துற்ற சூலுல்லாஹி” என்னும் கலிமாவைச் சொல்ல வேட்டுவனும் தனது மனமானது பொருந்திச் சொல்லி இனிமையுடன் ஈமான் கொண்டு புதிய ஆலத்தை யுடையவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைத் தொழுது செய்யா நிற்கும் நித்தியச் செயல்களைப் பொருந்தும் வண்ணம் கேட்டுச் சொர்க்கலோகத்திற்கு உரியவனாய்த் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையினது ஒழுங்கில் நின்றனன்.

 

2120. பெறுகதி நின்னாற் பெற்றேன் பெரும்பவங் களைந்தேன் மாறாத்

     தெறுகொலை விளைத்து முன்னஞ் செய்தொழி றவிழ்த்தே னீயு

     மறுகலை யெறிந்து தேறு மனக்கலை யொடுகன் றோடு

     முறுகலை யிடத்திற் போய்ச்சேர்ந் தொழுகலை முயல்தியென்றான்.

69

      (இ-ள்) அவ்விதம் நின்ற வேட்டுவன் அந்த மானைப் பார்த்து நான் உன்னால் பெறா நிற்கும் மோட்சத்தை பெற்றுக் கொண்டேன். என் பெரிய பாவத்தை இல்லாமற் செய்தேன். ஆதியில் நீங்காத நெருங்கிய கொலையை விளைத்துச் செய்கின்ற தொழில்களையும் ஒழித்தேன். நீயும் உனது மறுகுதலை வீசி