பக்கம் எண் :

சீறாப்புராணம்

820


முதற்பாகம்
 

      (இ-ள்) கதீஜா றலி யல்லாகு அன்ஹா வென்று கூறும் மேன்மையாகிய கொடி போல்பவர்கள் ஒரு காலத்தும் முடி வில்லாதவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் தூதுவராகிய நபிகட் பிரானார் நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அழகு சிறக்கப் பெற்ற உண்மையான துணைவியாய் இந்தப் பூலோகத்தின்கண் இருந்து பரிமள மமைந்த சொர்க்கலோகத்தினது பிரகாசத்தைக் கொண்டிருக்கும் மாளிகையில் குடியாகப் போய்ப் புகுந்தார்கள்.

 

2205. நனைத தும்பிய மலர்ப்புய முகம்மது நபிக்கு

     மனைவி யாகிய கத்தீசா வெனுங்குல மயிலைப்

     புனையும் பூந்துகில் பொதிந்துநற் புகழொடு மேந்தி

     வனையு மென்மணம் போலினி தடக்கினர் மகிழ்ந்தே.

14

      (இ-ள்) நறவ மானது ததும்பப் பெற்ற புஷ்ப மாலை யணிந்த தோள்களையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு நாயகியாகிய கதீஜா றலியல்லாகு அன்ஹா வென்னும் மேன்மையான மயில் போலும் சாயலுடையவர்களை அலங்கரியா நிற்கும் அழகிய வஸ்திரத்தினாற் பொதிந்து நல்ல கீர்த்தியோடும் தாங்கிச் சிறந்த மெல்லிய விவாகத்தைப் போல் களிப்புற்று இனிமையுடன் அடக்கஞ் செய்தார்கள்.

 

2206. பேதை யர்க்கர சினையருட் பெரியவன் றூதர்க்

     காத ரம்பெரு மயிலினை யெடுத்தினி தடக்கிக்

     காத லுற்றுயர் தீனிலை யவர்கலந் திருந்து

     கோத றச்செயுஞ் சடங்குகள் குறைவற முடித்தார்.

15

      (இ-ள்) அன்றியும், மடையர்களுக்கும் இராஜாங்கத்தைக் கொடா நிற்கும் பெரியவனான ஜல்ல ஷகுனகுவத்த ஆலாவின் தூதுவராகிய நாயகம் நபி ஹபீபுறப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு அன்பை யுடைய பெரிய மயில் போலுஞ் சாயலைக் கொண்டவர்களான கதீஜா றலி யல்லாகு அன்ஹா அவர்களை இனிமையுடன் எடுத்து அடக்கஞ் செய்து தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையை யுடையவர்கள் ஆசையுற்றுக் கலந்திருந்து குற்றமறக் குறைவில்லாது செய்யுஞ் சடங்குக ளெல்லாவற்றையும் செய்து நிறைவேற்றினார்கள்.

 

2207. இலக்க முற்றிடும் பெரியதந் தையரிறந் திருந்த

     அலக்கண் மேற்கொள வருந்திய காலையி லணியாய்

     நிலைக்கும் பேரெழின் மனைவியு மிறந்திட நிலையாக்

     கலக்க முற்றது மறைமுகம் மதுநபி கருத்தில்.

16