பக்கம் எண் :

சீறாப்புராணம்

824


முதற்பாகம்
 

ஏகனான என திடத்தில் வந்த வரலாற்றைக் கூறுவீர்களாக வென்று சொன்னான்.

 

2214. கண்ட போதினி லுவகையி னிருகரங் குவித்துக்

     கொண்டு நின்றுநன் மொழிபகர்ந் தனனெனக் குறித்து

     வண்டு வாழ்மலர்ப் புயமுகம் மதுநபி மணிவாய்

     விண்டு தேன்சொரிந் தெனச்சில மொழிவிளம் புவரால்.

7

      (இ-ள்) வண்டுக ளானவை வாழா நிற்கும் புஷ்ப மாலைகளைத் தாங்கிய தோள்களை யுடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்த இபுனு அப்து யாலிலென்பவன் தங்களைக் கண்ட காலத்தில் அவ்வாறு சந்தோஷத்தினால் இரண்டு கைகளையுங் குவியும்படி செய்து கொண்டு நின்று நல்ல வார்த்தைகளைப் பேசினா னென்று மனசின்கண் குறித்து அழகிய வாயைத் திறந்து நறவத்தைச் சிந்தினாற் போலச் சில வார்த்தைகளைக் கூறுவார்கள்.

 

2215. ஆதி தன்னருள் வானவர்க் கரசெனை யடுத்து

     நீதி நன்னபி யெனும்பெய ரளித்துநீ ணிலத்தில்

     வேத முமெனக் கருளிதீ னிலைவிரித் திடுமென்

     றோதி விண்ணகத் துறைந்தனர் செழுங்கதி ருலவ.

8

      (இ-ள்) யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் கிருபையையுடைய தேவர்க ளாகிய மலாயிக்கத்து மார்களுக்கு ராஜரான ஜபுறயீ லலைகிஸ்ஸலாமவர்கள் என்னைச் சமீபித்து நீதியையுடைய நல்ல நபி யென்னும் அபிதானத்தைக் கொடுத்து நீட்சியைக் கொண்ட இப் பூலோகத்தின்கண் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுந் தந்து தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையை விரியும்படி செய்யுமென்று சொல்லிச் செழிய பிரகாசமான துலவும் வண்ணம் ஆகாய லோகத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2216. அந்த நாட்டொடுத் திற்றைநாள் வரையுநல் லறிவர்

     புந்தி கூர்தரச் செழுங்கலி மாத்தனைப் புகட்டி

     வந்து சூழ்தரு பவக்களை தவிர்த்துமண் ணிலத்தி

     லுய்ந்து நற்கதி பெறுவதற் குறுதிசெய் தனனால்.

9

      (இ-ள்) அந்த நாள் தொடுத்து இந்த நாள் வரைக்கும் நல்ல அறிவை யுடையோர்கள் தங்களின் சிந்தையானது கூர்கின்ற செழிய கலிமாவைப் புகட்டி வந்து வளையா நிற்கும் பாவமாகிய களையை யொழித்து இந்தப் பூலோகத்தின்கண் ஜீவித்து நன்மை பொருந்திய மோட்சத்தைப் பெறுவதற்கு உறுதி செய்தேன்.