பக்கம் எண் :

சீறாப்புராணம்

826


முதற்பாகம்
 

2220. இனைய வாசக முரைத்தவ னிருப்பநம் மிறசூல்

     வினைய முற்றதிவ் விடத்தெனத் தாயுபை விடுத்து

     நினைவு நேரொடு தொழுதெழுந் திருந்துநன் னெறிக்கே

     நனைகொண் மென்மலர் கானகத் தருத்தர நடந்தார்.

13

      (இ-ள்) இப்படிப்பட்ட வார்த்தைகளை அந்த இபுனு அப்துயாலி லென்பவன் கூறி இருக்க நமது றசூலாகிய நபிகட் பிரானார் முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இவ்விடத்தில் வஞ்சகம் வந்து சேர்ந்ததென்று தாயு பென்னும் அந்நகரத்தை விட்டுச் சிந்தையினது நேர்மையுடன் அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவை வணங்கி எழும்பியிருந்து திருமக்கமா நகரத்தினது நல்ல பாதையில் நறவத்தைக் கொண்ட மெல்லிய புஷ்பங்களைக் கானகத்தின் கண்ணுள்ள மரங்க ளானவை தரும் வண்ணம் நடந்து சென்றார்கள்.

 

2221. ஆல மும்வெளி றிடக்கெடுங் கொடுமனத் தப்து

     யாலி லென்பவன் சிறியவர்க் கினியவை யுரைத்து

     மேலும் பேதைநெஞ் சவருட னிவரையும் விரவிக்

     கோலும் வன்கதம் வரச்சில மொழிகொளுத் தினனால்.

14

      (இ-ள்) அவ்வாறு செல்ல விஷமும் வெளிறும் வண்ணம் கெட்ட கொடிய மனத்தை யுடைய அந்த அப்துல் யாலிலென்பவன் சிறியவர்களுக்கு இனிமையான வார்த்தைகளைக் கூறி மேலும் மடத்தனத்தைப் பெற்ற இருதயத்தை யுடையவர்களோடு இப்பாலியர்களையும் சேர்த்து உண்டாகா நிற்கும் வன்மை யமைந்த கோபமானது வரும்படி சில வார்த்தைகளைக் கொளுத்தினான்.

 

2222. வெறியும் பித்துமுற் றவனிவண் பெருவழி விடுத்தோர்

     நெறியி டைத்தனி சென்றன னவன்றனை நேடி

     மறியுங் காறலைத் தகர்ந்திட வலியகல் லெடுத்திட்

     டெறியு மேகுமென் றுரைத்தன னரகிடை யெரிவான்.

15

      (இ-ள்) அன்றியும், நரகத்தின்கண் எரியக் கூடியவனான அந்த அப்துயாலி லென்பவன் மயக்கமும் பயித்தியமும் பொருந்தியவனாகிய முகம்ம தென்னுமொருவன் இவ்விடத்திலுள்ள பெரிய மார்க்கத்தை விட்டு ஒப்பற்ற பாதையின் கண் ஏகமாய்ப் போகின்றான். அவனை விரும்பி மறியா நிற்கும் கால்களும் சிரமும் தகரும்படி வலிய கற்களை எடுத்து எறியுங்கள்! செல்லுங்க ளென்று கூறினான்.