பக்கம் எண் :

சீறாப்புராணம்

84


முதற்பாகம்
 

172. வரபதி யுலகெலாம் வாழ்த்து மக்கமா

    புரபதிக் கதிபதி யென்னும் பூபதி

    பரபதி யரசர்கள் பணிந் திறைஞ்சிய

    நரபதி யப்துல்லா வென்னு நாமத்தார். 

7

     (இ-ள்) ஆசீர்வாதங்களையுடைய தலங்களமைந் திராநின்ற எல்லாவுலகங்களும் புகழும் மக்காவென்ற மாட்சிமைதங்கிய இராஜதானிப் பட்டணத்திற்கு அதிபரென்னும் பூமிபதியும் பரமண்டத்துத் தலைவர்களும் தாழ்ந்து வணங்காநிற்கும் மனுபதியும் அப்துல்லாவென்று சொல்லும் நாமத்தினையு முடையவர்.

 

173. செழுமழை முகிலென வமுதஞ் சிந்திட

    வழிகதிர் நபியென வகுத்த பேரொளி

    பொழிகரத் தப்துல்லா விடத்திற் பொங்கியே

    யெழிறரு திருநுத லிடத்தி லங்குமே.

8

     (இ-ள்) நபியென்று சொல்லும்படி பிரிக்கப்பட்ட வழிகின்ற கிரணங்களையுடைய நபிபெருமானாரது பெரிய பிரபையானது நிதியைச் சொரியுங் கைகளையுடைய அப்துல்லாவிடத்திற் செழியமழை மேகம்போல வமுதத்தைச் சிந்தாநிற்பப் பொலிந்து அழகைத் தருமவர்களது தெய்வீகத்துவ நெற்றியின்கண் பிரகாசியா நிற்கும்.

 

174. அயிலுறை செழுங்கரத் தப்துல் லாவெனும்

    பெயரிய களிறுக்கோர் பிடியும் போலவ

    ருயிரென விருந்தசைந் தொசிந்த பூங்கொடி

    மயிலெனு மாமினா வென்னு மங்கையே.

9

     (இ-ள்) வேலாயுத மொழியாதிருக்கும் செழிய கையினையும் அப்துல்லாவென்று சொல்லும் பெயரினையுமுடைய ஆண் யானைக்கு ஒப்பில்லாத பெண்யானை போலவும் அவரது உயிர்போலவும், இருந்து அசைந்து துவண்ட பூவானியன்ற கொடிபோலும் மனைவியானவர் சாயலினால் மயில்போலும் ஆமினாவென்று சொல்லும் மூன்றாம் பருவத்தையுடையவர்.

 

175. இற்புகுந் தெழுமதி யிலங்கு மாமணி

    விற்புரு வக்கடை மின்க ணாயகம்

    பொற்பெலாம் பொதிந்தபொற் கொடிநற் பூவையர்

    கற்பெலாந் திரண்டுருக் கொண்ட கன்னியே.

10

     (இ-ள்) அவ்வாமினாவெனும் மங்கையானவர் மனைக்கண் புகுந்து உதயமாகாநிற்குஞ் சந்திரனானவர், பிரகாசிக்கும் மாணிக்கமானவர், வில்லைப்போலும் புருவக்கடைகளை யுடைய