முதற்பாகம்
2279.
வன்களங்
ககற்றித் தீனின் வழிநிலை குறித்து வந்த
சின்களிற்
றலைமை யான சின்களிவ் வுரையைத் தேற்றப்
பொன்கடந்
தொளிருந் திண்டோட் புரவல ரிறசூ லுல்லா
வின்களிப்
பொழுக நோக்கி யெடுத்துரை கொடுப்ப தானார்.
25
(இ-ள்)
கொடிய குற்றத்தை யொழித்துத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது நிலைமையைக் குறிப்பிட்டு
வந்த ஜின்களிற்றலைமைத் தனத்தை யுடைய ஜின்னானது இந்த வார்த்தைகளைத் தேறும்படி கூறப் பொன்
னானது கிடந் தொளிரா நிற்கும் திண்ணிய புயங்களை யுடைய புரவல ரான நாயகம் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இனிமை யாகிய மகிழ்ச்சியானது சிந்தும்
வண்ணம் பார்த்து வார்த்தைகளை எடுத்துச் சொல்லலானார்கள்.
2280.
குவடுறை விலங்கி
னாலோ கொழுஞ்சிறைப் பறவை யாலோ
தவழ்தரு முயிரி
னாலோ தருக்களி னாலோ வுங்கள்
செவியறிந்
திதயங் கூர்ந்து தெரிதர வென்னை யிந்த
வவனியி லுண்மைத்
தூதென் றறியவேண்டுவதே தென்றார்.
26
(இ-ள்)
மலையின்கண் தங்கா நிற்கும் மிருகங்களினாலோ? செழிய சிறகுகளை யுடைய பட்சிகளினாலோ?
தவழ்ந்து திரிகின்ற ஜீவப் பிராணிகளினாலோ? மரங்களினாலோ? உங்களின் காதுகளானவை யுணரப்
பெற்று மனங் கூர்ந்து என்னை இந்தப் பூமியினிடத்து மெய்மையான றசூ லென்று தெரிய வேண்டுவது
ஏதென்று கேட்டார்கள்.
2281.
பேதமற்
றுரைத்தீர் சோதி பெருகுதீன் விளக்கே யிந்தப்
பாதையிற் றருவந்
தெங்கள் பார்வையிற் கணித்தாய் நின்று
தூதுவ ரென்றோர்
மாற்றஞ் சொல்லுமேற் கலிமா வோதிக்
கோதற மனத்து
ளீமான் கொள்வது திண்ண மென்ற.
27
(இ-ள்)
அவ்வாறு கேட்கவே, அந்த ஜின்கள் பிரகாச மானது ஓங்கா நிற்கும் தீனுல் இஸ்லா மென்னும்
மார்க்கத்தினது தீபமாகிய முகம்மதென்னுந் திருநாமத்தை யுடையவர்களே! நீங்கள் மாறுபாடின்றிக்
கூறினீர்கள். இந்த வழியின் கண்ணுள்ள மரமானது வந்து எங்களது பார்வைக்குச் சமீபமாய் நின்று
றசூலென்று ஒரு வார்த்தை கூறுமே யானால் குற்றமறக் கலிமாச் சொல்லி இருதயத்தினகம் ஈமான்
கொள்வது நிச்சயம்.
|