பக்கம் எண் :

சீறாப்புராணம்

860


முதற்பாகம்
 

2313. அந்தரம் புவிமட் டுலவியுங் காற்கட்

          டவிழ்க்கவல் லமையின ரிலையென்

     றிந்தன மெரியிற் கிடந்தென விதய

          மிடைந்திட வுடைந்தன னெளியேன்

     புந்தியற் றொடுங்கி யளவருங் காலம்

          போயபி னவனியின் மனுவிற்

     சுந்தரத் தொடும்பே ரறத்தொடு முருவாய்த்

          தோன்றின ராதமென் றொருவர்.

16

      (இ-ள்) அன்றியும், எளியேனாகிய யான் வானலோகம் பூலோகம் வரைக்கும் உலாவித் திரிந்தும் எனது காலினது கட்டை அவிழ்க்கும்படி தைரியத்தைப் பெற்றவர்க ளொருவரு மில்லரென்று விறகானது நெருப்பில் கிடந்ததைப் போல மனமானது வருந்தும் வண்ணம் உடை வுற்று அறிவற்று ஒடுங்குதல் கொண்டு அளவற்ற காலம் சென்ற பின்னர் இப்பூமியின் கண்ணுள்ள மானிடர்களில் அழகுடனும் பெரிய புண்ணியத்துடனும் ஆதமென்று ஒருவர் உருவாய் அவதரித்தார்.

 

2314. அவனியி லாத நபியெனும் பேர்பெற்

          றிருந்தன ரவரிடத் தேகித்

     தவிர்கிலா திடருற் றனனென வெளியேன்

          சாற்றினன் வீக்கினை நோக்கிக்

     கவரறப் பிணித்த காவல னலது

          கட்டறுப் பவரெவ ரென்னக்

     குவிதருந் திருவாய் விரிதர வுரைத்தார்

          கொடியனென் வலிகுறைந் திடவே.

17

      (இ-ள்) அவ்வாறு அவதரித்த அவர் இந்தப் பூலோகத்தின் கண் ஆத நபியென்று கூறும் அபிதானத்தைப் பெற்றிருந்தார். எளியேனாகிய யான் அவரிடத்திற் சென்று தவிராது துன்பமுற்றேனென்று கூறினன். அவர் அந்தக் கட்டினைப் பார்த்துக் கொடியவனான எனது வல்லமையானது குறையும் வண்ணம் கள்ளமறக் கட்டிய அவ்வரசனே யல்லாமல் வேறே யாவர் இந்தக் கட்டை யறுப்பவர்களென்று குவிந்த தெய்வீகந் தங்கிய தமது வாயானது விரியும்படி கூறினார்.

 

2315. இவ்வுரை பகர்ந்தா ராதநன் னபியென்

          றிருந்தனன் வருந்தின னதற்பின்

     குவ்வினி னபிமா ரென்னுமப் பெயர்பெற்

          றிருந்தவ ரிடந்தொறுங் குறுகிச்

     செவ்விதி னுரைத்தே னவ்வவ ரெவருந்

          திருநபி முகம்மதென் பவரால்

     வவ்விய தளைவிட் டகன்றிடு மலது

          மறுத்தெவர் தவிர்ப்பரென் றிசைத்தார்.

18