பக்கம் எண் :

சீறாப்புராணம்

88


முதற்பாகம்
 

குளிர்ச்சியான சுவர்க்கங்களடங்கலையும் அலங்கரித்ததும் வெந்த பாழான நரகங்களை அடைத்த பலவிதங்களுமாகிய இந்த வரலாறுகளெல்லாவற்றையுந் தெரிந்தது.

 

186. நடுங்கி வாயினீர் வறந்திட நாவுலர்ந் துடல

    மொடுங்கி யைம்பொறி மயக்குற நெஞ்செலா முடைந்து

    புடங்கொள் வங்கம தாய்நினை வுருகினன் புலம்பத்

    துடங்கி னானடிக் கடிபெரு மூச்சொடு கழன்றே.

21

     (இ-ள்) வாயினது நீர்காய்ந்திட நாக்குலர்ந்து உடலானது நடுக்குற்றொடுங்கி பஞ்சபொறிகளும் மயக்கமுறும்படி நெஞ்சமுழுவதும் தளர்ந்து எண்ணம் புடம்பற்றிய வீயமாயுருகி எறிந்த பெருமூச்சுகளோடு அடுத்தடுத்துச் சுற்றிப் பிதற்ற ஆரம்பித்தான்.

 

187. கரைவ னேங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி

    யிரைவன் கன்னத்திற் கையைவைத் திருந்தெழுந் திருப்பன்

    றரையின் மேல்விழுந் தெனக்கிலை யினிச்சிங்கா சனமென்

    றுரைம றந்திடக் கிடந்தன னிருகணீ ரொழுக.

22

     (இ-ள்) இரண்டு கண்களிலுமிருந்து நீர் சிந்தும்படி யுருவழிவான். அழுவான், மிகக் கலங்குவான். தன் மக்களைக் கூப்பிட்டு சத்திப்பான். தன்னிரண்டு கதுப்பினிடத்தும் கரங்களைச் சேர்த்து உட்கார்ந்திருந்து தரிப்பில்லாமல் எழுந்திருப்பான். சொன்மறக்க நிலத்தின்மீது விழுந்து இனிமேல் எனக்குச் சிங்காசனமில்லையென்று சொல்லிக் கிடந்தான்.

 

188. அறிவ ழிந்தமன் னவன்றனை மக்கள்வந் தடைந்து

    குறியுந் துன்பமும் வந்தவா றேதெனக் கூறி

    நிறையு மக்களோ டுறும்வர லாறெலா நிகழ்த்தி

    யுறையு மில்லிட மிவணிலை நமக்கென வுரைத்தான்.

23

     (இ-ள்) அறிவுகளை யிழக்கப்பெற்ற மன்னனெனு மவ விபுலீசை அவன் கூப்பிட்ட சத்தத்தால் அவனது மக்களெல்லோரும் வந்துசேர்ந்து உமக்கு இவ்வேற்றுமையான அடையாளங்களும் இக்கிலேசமும் வந்தவழி யாதென்று கேட்க, இவ்வாறு சொல்லி நிறைந்த தன்மக்களோடு தனக்குற்ற வரலாறுகள் முழுவதையும் சொல்லிக் காண்பித்து நம்மவர்கட்குத் தங்குதற் கேதுவாகும் இருப்பிடமானது இவ்விடத்திலில்லையென்றுஞ் சொன்னான்.

 

189. இந்த வாசகங் கேட்டலு மக்களெல் லோருந்

    தந்தை யேயிதற் கென்செய்வோ மெனத்தடு மாறிப்

    புந்திநொந்து நொந் தவரவர் திசைதிசை புகுந்தார்

    சிந்தை நொந்திபு வீசுவுந் திகைத்திருந் திடைந்தான்.

24