பக்கம் எண் :

சீறாப்புராணம்

885


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) சஃதென்று கூறும் மன்னவன் இவ்வுலகத்தின்கண் மேலான மகிமையை யுடைய பொறுமையிலும் உணர்விலு மிகுத்தவன், மகா தவத்தையுடைய முன்னுள்ள நபிமார்கள் கூறும் வேதங்களினது சன்மார்க்க முறைமையில் நடைபெற்று நிற்பவன், கொலைத் தொழிலையுடைய வெவ்விய யானையை யொத்த சத்துராதிகளுக்கு ஆண் சிங்கத்தை நிகர்த்தவன், இந்தத் திருமதீனமா நகரத்தினது தலைவர்கட்கெல்லாந் தலைமைத் தனத்தையுடையவன்.

 

2381. மன்னுமென் னுயிரே யன்னான் மாற்றமே தெனினு மென்சொற்

     றன்னுரை யென்னத் தேறுந் தன்மையன் வடுவொன் றில்லா

     னன்னவன் கலிமா வோதி யாரண நெறிநின் றானே

     லிந்நகர் முழுது மீமான் கொண்டதற் கைய மின்றே.

36

      (இ-ள்) நிலை பெற்ற எனதாவிக் கொப்பானவன், எச்சமாச்சாரமா யிருந்தாலும் எனது வார்த்தைகளைத் தனது வார்த்தைகளைப் போல் நிச்சயிக்கும் தன்மையை யுடையவன், யாதொரு குற்றமு மில்லாதவன், அப்படிப்பட்ட அந்தச் சஃதென்பவன் கலிமாச் சொல்லி புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது சன்மார்க்கத்தில் நிற்பானே யானால் இந்தத் திருமதீனமா நகர முழுவதிலு முள்ள ஜனங்கள் ஈமான் கொள்வதற்குச் சந்தேக மில்லை.

 

2382. பிடித்தொரு மொழியி னெஞ்சம் பேதுற வவனை நுங்க

     ளிடத்தினில் வரச்செய்வே னியா னிதத்தொடு மினிய மாற்றந்

     தொடுத்துரைத் தருங்கு றானைச் செவிவளைத் துளைக்கு ளோட்டிப்

     படித்தநல் லறிவிற் றேற்றித் தீன்வழி படுத்து மென்றார்.

37

      (இ-ள்) அவனை அவனது நெஞ்சமானது மயங்கும் வண்ணம் நான் ஒரே வார்த்தையினாற் பிடித்து உங்க ளிடத்தில் வரும்படி செய்கிறேன், நீங்கள் அவனுக்கு இனிமையோடும் மதுரமான வார்த்தைகளைப் பொருத்திக் கூறி அருமையான புறுக்கானுல் அலீமென்னும் வேத வசனங்களை அவனது காதின் வட்ட வடிவினையுடைய துவாரத்தினகம் செலுத்தி அவனை நீங்கள் கற்ற நல்ல வுணர்வினாற் றெளியும் படி செய்து தீனுல் இஸ்லாமென்னும் சன்மார்க்கத்தி லாக்குங்க ளென்று சொன்னார்.

 

2383. இருவருங் களிப்பக் கூறி யெழின்மலர்ப் பொழில்விட் டேகித்

     தெரிதர யீமான் கொண்ட சிந்தையிற் புளகம் பூப்பத்

     திருமருப் புயங்க ளோங்கச் செம்முக மலர்ந்து தோன்ற

     வருவது நோக்கிச் சஃது மன்னவ னுளத்திற் சொல்வான்.

38