பக்கம் எண் :

சீறாப்புராணம்

889


இரண்டாம் பாகம்
 

2392. மருவலர்க் கெனினு மோர்சொல் வகுத்தமர் விளைப்ப ரென்ன

     விரிமறை யவர்கள் கூறு மெய்மொழி யதனான் வேண்டி

     யொருநொடிப் பொழுதெம் முன்ன ருவந்தினி திருந்தோர் மாற்றந்

     தெரிதரக் கேட்டுப் பின்னுன் றிறல்செலுத் திடுக வென்றார்.

47

     (இ-ள்) அவன் அவ்வா றுரைக்க, அம் முசுயி பென்பவர் சத்துராதிகளுக் காயினும் ஒரு வார்த்தை சொல்லிப் பின்னர் யுத்தஞ் செய்வார்க ளென்ன விரிந்த வேதத்தை யுடையவர்கள் புகலும் சத்திய வாசகத்தினால் நீ விரும்பி ஓர் நொடிப் பொழுது எங்களது முன்னர் பிரியத்தோடு மினிமையா யிருந்து யாங்கள் சொல்லும் ஒப்பற்ற வாசகத்தை விளங்கக் காதுகளினாற் கேள்வியுற்றுப் பின்னர் உனது வல்லமையைச் செலுத்துவாயாக வென்று சொன்னார்.

 

2393. முன்னவ னொருவ னீதி முறைமையிற் குரியன் மற்றோ

     னின்னவர்க் காக வேண்டி யிருந்தறி குவமியா மென்ன

     வுன்னிய வெகுளித் தீயை யுணர்வெனு நீரான் மாற்றிப்

     பின்னெதி ரிருந்து நீவிர் பிதற்றுவ தெவைகொ லென்றான்.

48

      (இ-ள்) அவர் அவ்வாறு கூற, அந்தச் சஃதென்பவன் இவர்களில் ஒருவன் நமது தமையன், மற்றவன் நியாயமான உறவொழுங்கினுக்குச் சொந்தமானவன், ஆதலால் இவ்விருவர்களுக்காக வேண்டி இவர்கள் சொல்லுவதை யாமிருந்துணர்வோ மென்று மனதின்கண் விரைந்தெழும்பிய கோபமென்னு மக்கினியை அறிவென்னு மப்புவினாலொழித்துப் பின்னரவர்களின் முன் னுட்கார்ந்து நீங்கள் உளறுவது யாவை? அவற்றை யுளறுங்க ளென்று கேட்டான்.

 

2394. நகரினுக் குரிய  னோது நாவினன் றெளிந்த நீரா

     னிகரரும் வீரத் தானந் நெறியினுக் கமைந்தா னென்னப்

     புகரற மனத்துட் கொண்டு பூரித்த புளகத் தோடும்

     பகரரும் வேதத் துற்ற சொல்லினைப் பகுத்துச் சொன்னார்.

49

     (இ-ள்) அவன் அவ்வாறு கேட்க, முசுயி பென்பவர் இம் மதீனமா நகரத்திற்குச் சொந்தமானவனும் அதிகாரத்தைக் கூறும் நாவை யுடையவனும் தேர்ந்த குணத்தை யுடைவனும் ஒப்பற்ற வீரத்தை யுடைவனுமாகிய இச் சஃதென்பவன் நமது வழிக்குட்பட்டானென்று குற்றமற மனத்தினுட் சிந்தித்துப் பூரண மகிழ்ச்சியோடும் முன்னர் உசைதுக்குக் கூறிய அருமையான புறுக்கானுல் அலீமென்னும் ஆரணத்திற் பொருந்திய வசனத்தைப் பிரித்துக் கூறினார்.