பக்கம் எண் :

சீறாப்புராணம்

890


இரண்டாம் பாகம்

2395. முறைமையிற் சிதகா வண்ண முசுயிபு பகுத்துச் சொன்ன

     மறையுமம் மறையி னுற்ற வழியுமவ் வழியி லுற்ற

     பொறையுநல் லமிர்த மென்னச் செவிவழி புகுதக் கேட்டு

     நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சுநெக் குருகி னாரே.

50

     (இ-ள்) ஒழுங்கிற் சிதகாதபடி அவ்வாறு முசுயிபென்பவர் பிரித்துக் கூறிய புறுக்கானுல் அலீமென்னும் வேத வசனமும் அவ் வேத வசனத்திற் பொருந்திய சன்மார்க்கமும் அச் சன்மார்க்கத்திற் பொருந்திய பொறுமையும் நல்ல அமிர்தத்தைப் போலக் காதுகளின் வழியாயுண் ணுழைய, அச்சஃதென்பவர் கேள்வியுற்றுப் பூரண மகிழ்ச்சி யடைந்து மன மானது கனியப் பெற்றார்.

 

2396. ஆரமு தனைய வேதத் தருமொழி யகத்துட் டேக்கிப்

     பேருணர் பொங்கி யாவுந் தோற்றிடாப் பெருக்கா நந்தக்

     கார்முகிற் கவிகை வள்ளல் தீனெனுங் கடலு ளாழ்ந்து

     வாரமுற் றறிவி னாலீ மானெனும் போகந் துயத்தார்.

51

      (இ-ள்) அவ்வாறு கனியப் பெற்ற அச் சஃதென்பவர் அருமையான அமுதத்தை யொத்த புறுக்கானுல் அலீமென்னு மறையினது அரிய வசனங்களை யிருதயத்தின்கண் நிறையும்படி செய்து பெரிய அறிவான தோங்கப் பெற்று யாவுங் கட்பார்வைக்குத் தெரியாச் சந்தோஷப் பிரவாகத்தினால் கரிய மேகக் கொடையையுடைய வள்ளலான நமது நாயகம் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் தீனுல் இஸ்லா மென்னு மெய் மார்க்கச் சமுத்திரத்துள் மூழ்கி அன்புற்றுப் புத்தியினால் ஈமா னென்னும் இன்பத்தையனுபவித்தார்.

 

2397. மாதவ ரிறசூ லென்னு முகம்மதை வாழ்த்தி வாழ்த்தி

     வேதநன் னிலையிற் றோன்றும் விதிமுறைக் கலிமா வோதிப்

     பூதலத் துயர்ந்த நல்லோர் புகழ்ந்திட இசுலா மாகி

     மூதறி வுடைய வள்ளன் முசியிபைத் தழுவி னாரால்.

52

     (இ-ள்) அவ்வா றனுபவித்த அவர் மகா தவத்தை யுடைய றசூலென்னும் நாயகம் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை மிகப் புகழ்ந்து புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது நன்மை பொருந்திய நிலைமையிற் பிரகாசியா நிற்கும் நியமிப்பினது ஒழுங்கை யுடைய ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவையுரைத்து இப்பூமியி னிடத்து மேன்மைப்பட்ட நல்லோர்கள் வாழ்த்தும் வண்ணம் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்திலாகி முற்றிய அறிவை யுடைய வள்ளலாகிய அம் முசுயி பென்பவரைக் கட்டிச் சேர்ந்தார்.