பக்கம் எண் :

சீறாப்புராணம்

892


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வித முண்ணச் செய்து அவர்களுக்கு வெற்றிலையும் மெல்லிய துவர்க்காய்த் துண்டமுங் கொடுத்து மேன்மையை யுடையவர்களான அவர்களின் மனங்கள் மகிழ்ச்சி யடையத் தம்மிடத்திலுள்ள மற்ற ஜனங்களி னிதயத்தினது குற்றமான தற்றுப் போகும்படி அவர்களின் நாவினாற் கலிமாவை விள்ளும்படி செய்து தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தைப் பிரகாசிக்கச் செய்வே னென்று சொன்னார்.

 

2402. அன்னது கேட்டகங் குளிர்ந்து மூவரு

     மன்னிய விடத்தினிற் புக்க மன்னவர்

     தம்முயி ரெனுங்கிளை யவரைச் சார்பினி

     லின்னலற் றிடவழைத் திருத்தி னாரரோ.

57

      (இ-ள்) அவ் வாசகத்தை அந்த முசுயிபு, அசுஅது, உசைதென்னு மூவர்களுங் காதுகளினாற் கேள்வியுற்ற மனங்குளிர்ந்து தாங்கள் தங்கியிருந்து மிடங்களிற் போய்ச் சேர துன்பமான தற்றுப் போகும்படி அரசராகிய அசுஅ தென்பவர் தமது பிராண னெனக் கூறா நிற்கும் பந்து ஜனங்களைக் கூப்பிட்டுத் தமது பக்கத்தில் இருக்கும்படி செய்தார்.

 

 

2403. இனத்தவர் குழிவினை நோக்கி யென்னைநும்

     மனத்தினி லெவரென மதிக்கின் றீர்சொலும்

     பினைத்தனி புகல்வனியா னென்னப் பேசினார்

     சினத்தடக் கதிரயி லேந்துஞ் செங்கையார்.

58

     (இ-ள்) கோபத்தைச் செய்யா நிற்கும் பெருமை பொருந்திய ஒள்ளிய வேலாயுதத்தைத் தாங்கி சிவந்த கையையுடைய அந்தச் சஃதென்பவர் அவ்வாறு இருக்கச் செய்த அந்தப் பந்து ஜனங்களின் கூட்டத்தைப் பார்த்து என்னை நீங்கள் உங்களுடைய இருதயத்தின்கண் யாவரென்று கருதுகின்றீர்கள்? அதைக் கூறுங்கள். பின்னர் ஒப்பற யான் எனது மனதி லிருப்பதைக் கூறுகிறே னென்று சொன்னார்.

 

2404. சாதெனு மன்னவர் சாற்றக் கேட்டலும்

     பேதுறு மனத்தொடும் பெரிது நைந்திவ

     ரேதிவை யுரைத்தன ரோவென் றெண்ணுறுங்

     காதரத் தொடுமெதிர் கவல்வ தாயினார்.

59

      (இ-ள்) சஃதென்னு மபிதானத்தை யுடைய அரசரான அவர் அவ்வாறு சொல்ல, அப்பந்து ஜனங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் அறிவு கலங்கிய மனத்தினுடன் மிகவுந் தளர்ந்து இவர் யாது? இவ்விதங் கூறினா ரென்று சிந்தித்துப் பயத்தோடும் பதில் கூறத் தொடங்கினார்கள்.