பக்கம் எண் :

சீறாப்புராணம்

902


இரண்டாம் பாகம்
 

2435. நிலைமுறை தவறிலா நீதி மன்னவர்

     தலைமுறை தலைமுறை வீரந் தாழ்விலார்

     நலனுறும் புகழினர் நாம வேலின

     ரலைவிலா ரெமர்குலத் தறிவின் செல்வரே.

25

      (இ-ள்) எம்மவர்களின் குலத்தினது அறிவினை யுடைய செல்வர்கள் இவ்வுலகத்தினது ஒழுங்குகளின் பிசகாத நியாயத்தையுடைய அரசர்கள், தலைமுறை தலைமுறையாகத் தங்களது வல்லமையிற் குறையாதவர்கள் நன்மை பொருந்திய கீர்த்தியையுடையவர்கள், புகழினது வேலாயுதத்தை யுடையவர்கள், துன்ப மற்றவர்கள்.

 

2436. இத்திறத் தவர்களு மியாங்க ளும்மும

     துத்தரத் தாடியி னுறையும் பாவைபோல்

     வித்தக நெறிமுறை விளக்கு வோமிவை

     யத்தலத் துறைந்தபி னறிய வேண்டுமால்.

26

      (இ-ள்) அறிவினை யுடைய நபிகட் பெருமானே! இவ்விதத் தன்மைகளை யுடைய அவர்களும் நாங்களும் உங்களது உத்திரவிற்குக் கண்ணாடியிற் றங்கும் பதுமையைப் போல யாவர்கட்கும் சன்மார்க்கத்தினது ஒழுங்குகளை விளக்கிக் காட்டுவோம். இவ்வார்த்தைகளை நீங்கள் அந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் வந்து தங்கிய பிற்பாடு உணர்தல் வேண்டும்.

 

2437. இந்தநன் மொழிக்கியைந் திறைவ நம்பதி

     வந்திருந் தினிரெனின் மருவ லார்களா

     லுந்திய பெரும்பகை யொடுக்கி வேர்வைகள்

     சிந்திடி லுதிரமே சிந்தச் செய்குவோம்.

27

      (இ-ள்) இறையீ ரென்னும் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களே! நீங்கள் நன்மை பொருந்திய இந்த வார்த்தைகளுக்குச் சம்மதப்பட்டு நமது பட்டினமாகிய திரு மதீனமா நகரத்தின் கண் வந்திருப்பீர்களே யானால் நம் சத்துராதிகளால் ஓங்கிய பெரிய விரோதத்தை யடக்கி அன்னவர்களால் நம்மவர்களுக்கு வேர்வைகள் சிந்தும் பட்சத்தில் அதற்குப் பதிலாக அவர்களின் இரத்தங்களையே சிந்தும் வண்ணஞ் செய்வோம்.

 

2438. இவ்வண்ணந் தவறிலா தியற்று வோமெனச்

     செவ்வணக் கருத்தொடும் வலக்கை சேர்த்துவ

     மைவண்ணக் கவிகையீ ரெங்கள் வாய்மையிற்

     குவ்வினிற் குறையிலை யென்னக் கூறினார்.

28