பக்கம் எண் :

சீறாப்புராணம்

905


இரண்டாம் பாகம்
 

2445. ஆதிமுன் மொழிகலி மாவை யன்பொடு

     மோதின ரெனதுட லுயிரின் மிக்கவர்

     பேதுறத் தீனிலை பிழைத்து நின்றவர்

     தீதுற விருமையுந் தீய ராவரால்.

35

      (இ-ள்) யாவற்றிற்கும் முதன்மையான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் ஆதி வார்த்தையாகிய ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவை நேசத்துட னுரைத்தவர்கள் எனது தேகத்தையும் பிராணனையும் பார்க்கிலும் மேலானவர்கள். மனமானது மயங்கும் வண்ணம் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையிற் றவறித் தீமை பொருந்த நின்றவர்கள் இம்மை மறுமை யென்னு மிரண்டிலும் தீமையை யுடையா ராவார்கள்.

 

2446. வரைத்தடஞ் சாயினு மதிதெற் காயினுங்

     கரைத்தெறி திரைக்கடல் சுவறிக் காயினுந்

     தரைத்தலம் புரளினும் வாய்மை தக்கயா

     னுரைத்தவை மறுத்தெடுத் துரைப்ப தில்லையால்.

36

     (இ-ள்) பெருமை பொருந்திய மலைகள் பூமியிற் சரிந்தாலும், சந்திரனானது தெற்கே யுதயஞ் செய்தாலும், கரையைக் கரைத்து வீசா நிற்கும் சமுத்திரமானது வற்றி யுலர்ந்தாலும், இப்பூமியானது புரண்டாலும், சத்தியத்தினது தகுதியை யுடைய யான் கூறிய வார்த்தைகளை மறுத் தெடுத்துக் கூறுவதில்லை.

 

2447. முன்முக மலர்ச்சியின் மொழிந்து வேறொரு

     வன்மமுற் றிடிலவை மறந்து மேலவர்

     நன்மனத் தொடர்விடு நட்பு நாடொறுந்

     தின்மையை வளர்த்தறந் தீய்த்து நிற்குமே.

37

      (இ-ள்) முதலில் முக மலர்தலோடும் ஓர் கருமத்தைப் பற்றிப் பேசிப் பின்னர் வேறொரு வைராக்கியத்தை யுடைய காரியம் வந்து சேரும் பக்கத்தில் முதலிற் பேசிய அந்த வார்த்தைகளை மறந்து மேலோர்களின் நன்மை பொருந்திய இதயத்தினது நேசத் தொடர்பை விடுகின்ற சினேக மானது பிரதி தினமும் தீமையை வளரச் செய்து புண்ணியத்தைக் கெடுத்து நில்லா நிற்கும்.

 

2448. சாலவு நட்பினைத் தணப்பி லாதவர்

     மேலவர் நட்பினை வெறுக்கும் வாய்மையர்

     சீலமொன் றின்றிய சிறுமை யாரென

     நூலினும் வழக்கினு நுவலு கின்றதே.

38

      (இ-ள்) சினேகத்தை விட்டும் மிகவும் பிரியாதவர்களான மேன்மையை யுடையோர்களின் நேசத்தைப் பகைக்கும்