பக்கம் எண் :

சீறாப்புராணம்

907


இரண்டாம் பாகம்
 

2452. கான்றி டுங்கதிர் வாண்மற வாதகை யினரா

     யூன்று வெஞ்சின வீரத்தி னுடன்பிறந் தவரா

     யான்ற பேரறி வவுசுவங் கிஷத்தவ ரதனின்

     மூன்று பேரையு முதன்மைய ரெனும்படி முடித்தார்.

42

      (இ-ள்) பிரகாசியா நிற்கும் ஒளிவினது, வாளாயுதத்தை மறக்காத கையை யுடையவர்களாகவும், பலப்படுத்துகின்ற வெவ்விய கோபத்தினது வல்லைமையோடு தோற்றியவர்களாகவும், மாட்சிமைப் பட்ட பெரிய அறிவை யுடைய அவுசுக் கிளையார்களில் நின்று மூன்று பேர்களையும் தலைமையோர்களென்று சொல்லும் வண்ணம் தெரிந்து முடித்தார்கள்.

 

2453. இருகு லத்தினு முதியவர் பன்னிரு வரையும்

     வரிசை நாயகன் றூதுவர் முகம்மது நபிமுன்

     விரைவி னிற்கொடு வந்தனர் விறலுட னுலவித்

     திரியுங் கேசரிக் குடன்படு முழுவையின் றிரள்போல்.

43

      (இ-ள்) அந்த கசுறஜூ அவு சென்னு மிரு கிளைகளிலு முதியோர்களாகிய அப்பன்னிரண்டு பேர்களையும் சிறப்பினையுடைய நாயகனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா ஹபீபுறப்பில் ஆலமீன் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் முன்னர் வலிமையோடு முலாவிச் சஞ்சரியா நிற்கும் ஓர் சிங்கத்திற் கிசைந்த புலிகளின் கூட்டத்தைப் போல் விரைவில் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

 

2454. இலகு தீனிலைக் குரியரி னெழுபத்து மூன்று

     தலைவ ரினுயர் தலைவர்பன் னிருவர்க டமக்கு

     னிலைமை முன்னிலைத் தலைவரா அசுஅதை நிறுத்தி

     யுலகின் மேல்வருந் திறனெடுத் தியனபி யுரைப்பார்.

44

      (இ-ள்) பிரகாசியா நிற்கும் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமைக் குரிமையர்களான திரு மதீனமா நகரத்தார்களில் தலைவர்கள் எழுபத்தி மூன்று பேர்களிலுயர்ந்து தலைமைத் தனத்தை யுடைய அப்பன்னிரண்டு பேர்களுக்குள், உறுதியையுடைய அசுஅ தென்பவரை முன்னிலைமையினது தலைவராக நிற்கும்படி செய்து இப்பூமியின் மீது வரா நிற்கும் காரணங்களை எடுத்து ஒழுங்கினை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கூறுவார்கள்.