பக்கம் எண் :

சீறாப்புராணம்

91


முதற்பாகம்
 

கண்களிலு மையினை யெழுதிக் கஸ்தூரியையும் சேர்க்கப்பட்ட சந்தனக் கலவையும் பூசி நல்ல கிரணத்தை வீசிய தீபம் போல வெழும்பினார்கள்.

 

196. இனத்து ளாரெனுஞ் செழுமலர்க் கொடிநடு விடையே

    கனத்த மாமணிக் கொம்பென நடந்துகஃ பாவின்

    மனத்தி ருக்கற வலஞ்செய்து வாயிலில் வந்து

    நினைத்தி டும்பொரு டருகெனப் போற்றினர் நிறைந்தே.

31

     (இ-ள்) அவ்வாறெழுந்த ஆமினா அவர்கள் தமது குடும்பத்தாரென்று சொல்லும் செழிய பூங்கொடிபோலும் பெண்களினது நடுவணாகத் தகுதிபூண்ட மாணிக்கத்தாலான கொப்பைப் போல நடந்து கஃபத் துல்லாவை யடைந்து அதனை மனக்குற்ற மறும்படி தவ்வாபென்கிற பிரதக்கணஞ்செய்து அதன் வாசலின்கண் வந்து நின்று கொண்டு நானெண்ணிய பொருளைப் பூரணமாய்த் தருவாயாக வென்று தெய்வத்தைத் துதித்தார்கள்.

 

197. வண்டு வாழ்குழன் மடந்தையர் திரண்டுவாழ்த் தெடுப்பக்

    கண்டு மென்கொடி யாமினா தாமரைக் காலின்

    முண்ட கச்செழு மலர்சொரி தலைமுகங் கவிழத்

    தெண்ட னிட்டது புத்தென வுறைந்ததே வதையே.

32

     (இ-ள்) தேனீக்களானது நீங்காது குடியிருந் தோங்காநிற்கும் அளகபாரத்தையுடைய ஆமினா முதலிய பெண்கள் ஒன்றுசேர்ந்து முன்னின்று வணங்க, அதனை விக்கிரகமென்று சொல்லும்படி அக்ககுபாவினுள் தரிக்கப்பட்டுள்ள பிரகாசமானது பார்த்துத் தாமரையாகிய செழுமையுற்ற மலர்களைச் சொரியும் தனது தலையும் முகமும் கவிழும்படி மெல்லிய கொடிபோலும் ஆமினா அவர்களின் செந்தாமரைப் பூப்போன்ற பாதத்தின்கண் விழுந்து வணங்கிற்று.

 

198. அஞ்ச லித்தது புத்தென மனத்ததி சயித்து

    மஞ்சு வார்குழ லாமினா பயந்துமெய் வருந்திக்

    கஞ்ச மின்னனார் கணத்துடன் வாயிலைக் கடந்தே

    யின்சொ னன்குலக் கிளியென மனையில்வந் திருந்தார்.

33

     (இ-ள்) விக்கிரகமானது தமது பாதங்களில் வணங்கிற்றென்று மேகம் போலும் நீண்ட கூந்தலையுடைய ஆமினா அவர்கள் தங்களது மனசின்கண் அதிசயமுற்றுப் பயங்கொண்டு அதனாலுடல் வருந்தித் தாமரைமலரின் கண் வீற்றிருக்கும் சீதேவியை யொத்த பெண்களினது கூட்டத்துடனே அக்ககுபாவினது வாசலைக் கடந்து மீண்டு இனிய சொற்களையுடைய நல்ல குலத்திற் சிறந்த கிளியைப் போன்று வீட்டில் வந்திருந்தார்கள்.