பக்கம் எண் :

சீறாப்புராணம்

910


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) பிரகாசியா நிற்கும் ஒளிவினது சிறகுகளை யுடைய ஜிபுரீலலைகிஸ்ஸலா மவர்கள் அவ்வாறு கற்பித்த வார்த்தைப் பிரகாரம் நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஆசனத்தின் மேலுட்கார்ந்து கொண்டு அவரவர்களின் ஒழுங்குகள் பிசகாத வண்ணம் யாவரும் தங்களினிதயத்தின் கண் சந்தோஷத்தைப் பொருந்தும் படி நீங்கள் எனக்கு வலக்கை கொடுத்துக் காதுகளானவை குளிருகின்ற நல்ல வார்த்தைகளோடு முடிவு செய்யுங்களென்று சொன்னார்கள்.

 

2462. மதியின் மிக்கநன் முகம்மதங் குரைத்தலு மதீனாப்

     பதியின் மன்னவர் முறைமுறை யெழுந்தபடி பணிந்து

     சிதைவி லாத்திட மொழிகொடுத் தணிக்கரஞ் சேர்த்தி

     விதுவுஞ் சூழுடு வினமுமொத் திருந்தனர் விளங்கி.

52

      (இ-ள்) அறிவினால் மேன்பட்ட நன்மையை யுடைய நபிகட் பெருமான் நபி முகம்மது முஸ்தபா றசுல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்விடத்தில் அவ்வாறு கூறிய மாத்திரத்தில் திரு மதீனமா நகரத்தினது அரசர்களெல்லாரும் வரிசை வரிசையாய் எழும்பி அந் நபிகட் பெருமானவர்களின் பாதங்களிற் றாழ்ந்து கெடுதலற்ற சத்திய வார்த்தைகளைச் சொல்லி அழகினையுடைய வலது கையைச் சேர்த்துப் பொருத்தி சந்திரனையும் அதை வளைத்த நட்சத்திரக் கூட்டங்களையும் போலப் பிரகாசத்துட னிருந்தார்கள்.

 

2463. திடங்கொண் மும்மதக் கரிக்குபிர்ப் பகையறச் செழுந்தீன்

     மடங்க லேறென வருதிரண் மதீனமன் னவர்க

     ளிடங்கொள் சிந்தையிற் றெரிதருந் தமியர்க ளினிமேற்

     றொடங்கும் வீரத்தின் றிறமெனப் பணிவொடுஞ் சொன்னார்.

53

      (இ-ள்) அவ்வித மிருந்த குபிராகிய வலிமையைக் கொண்ட கன்னமதம், கைமதம், கோசமத மென்னு மும்மதங்களை யுடைய யானையினது விரோதமான தற்றுப் போகும் வண்ணம் செழிய தீனுல் இஸ்லாமென்னும் ஆண் சிங்கத்தை நிகர்த்து வரா நிற்கும் அக் கூட்டமான மதீனமா நகரத்தினது அரசர்கள் வறியவர்களாகிய யாங்கள் ஆரம்பிக்கா நிற்கும் வீரத்தினது மேன்மையானது உங்களது விசாலித்த இதயத்தின் கண் இனிமேல் விளங்குமென்று தாழ்வோடுங் கூறினார்கள்.

 

2464. என்று மிம்மொழி தவறிலா துறநிறை வேற்றி

    நின்ற மன்னவர்க் காதிதன் கிருபையு நிறைந்த

    வென்றி யுஞ்சுவர்க் கமுமருள் குவனென விரித்தார்

    மன்ற றுன்றிய மதுமல ரணிமுகம் மதுவே.

54