பக்கம் எண் :

சீறாப்புராணம்

920


இரண்டாம் பாகம்
 

2493. மகித லம்புகழ் குதுமன் னவர்வள மத

     நகர்பு குந்தபின் செழுமறை முகம்மது நயிண

     ரகம கிழ்ந்துதீ னவர்களை யழைத்தரு கிருத்திப்

     புகர றத்தம துளத்தினி னினைத்தவை புகல்வார்.

28

      (இ-ள்) இவ் வுலக மானது துதிக்கா நிற்கும் சஃதென்னும் பெயரினரசர் அவ்வாறு செல்வத்தை யுடைய திரு மதீனமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்த பிற்பாடு செழிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடைய நயினா ரான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அம் மக்கமா நகரத்ததின் கண் தங்கிய தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தார்களைக் கூப்பிட்டுப் பக்கத்தி லிருக்கும்படி செய்து மனமானது சந்தோஷிக்கப் பெற்றுக் குற்ற மறும் வண்ணம் தங்களி னிதயத்தி லெண்ணியவைகளைச் சொல்லுவார்கள்.

 

2494. வற்று றாப்புனற் றடந்திகழ் மதீனமன் னவரை

     யுற்ற மெய்த்துணை யாயுடற் குயிரதா வுறுந்தீன்

     வெற்றி யாய்வலி யாய்ப்புகழ் நிலைபெற விளக்க

     முற்றும் நம்வயி னளித்தனன் றனிமுத லவனே.

29

      (இ-ள்) ஒப்பற்ற முதன்மைய னான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவானவன் குறையாத நீரை யுடைய வாவி களானவை பிரகாசியா நிற்கும் திரு மதீனமா நகரத் தரசர்களை நம் மிடத்தில் பொருந்திய உண்மைத் துணைவர்களாகவும், நமது சரீரங்களுக்குப் பிராணனாகவும், தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தினது விஜயமாகவும், வலிமையாகவும் கீர்த்தியானது நிலைத்தலுற முழுவதும் விளங்கும் வண்ணம் சேர்த்துத் தந்தான்.

 

2495. இந்த வூரினிற் குபிருழை யுழன்றன மினிமே

     லந்த நற்பதி புகுவமே லெதிரடை யலரால்

     வந்த வெம்பகை தடிந்திசு லாமினை வளர்த்து

     நந்த மர்க்கெவ ரிணையெனத் தீனெறி நடத்தும்.

30

      (இ-ள்) நாம் இந்தத் திரு மக்கமா நகரத்தின் கண் காபிர்களினிடத்து உலைந்து திரிந்தோம். இனிமேல் அந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் போய்ச் சேருவோமே யானால் முரண்பாட்டையுடைய சத்துராதிகளால் வந்து சேர்ந்த கொடிய விரோதத்தைக் குறைத்துத் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தை யதிகரிக்கச் செய்து நம்மவர்களுக்கு ஒப்பாவார் யாவரென்று தீனினது முறைமைகளை நடத்தலாம்.